அசிசி நகரில் ’உலக அமைதிக்கான பல்சமய உரையாடல்’

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 21, 2011

உலகம் அனைத்திலுமிருந்தும் பல்வேறு சமயங்களின் தலைவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை அக்டோபர் 27ஆம் நாள் இத்தாலியின் அசிசி நகரில் ஒன்றுகூடி, உலக அமைதி பற்றிக் கலந்துரையாட வருகிறார்கள். பேர் போன நான்கு நாத்திகத் தலைவர்களும் வருகிறார்கள்.


நீதி மற்றும் அமைதிக்கான திருத்தந்தை சங்கத்தின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்

அசிசியில் நிகழவிருக்கின்ற கூட்டத்தில் "பொது இறைவேண்டல்" நிகழாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "நீதி மற்றும் அமைதிக்கான திருத்தந்தை சங்கம்" (Pontifical Council for Justice and Peace) என்னும் வத்திக்கான் அமைப்பின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அளித்த செய்தி உரையின்போது, "பல சமயங்களின் தலைவர்கள் இணைந்து இறைவேண்டல் செய்வதற்கு அழுத்தம் கொடுக்காமல், அவர்கள் மேற்கொள்கின்ற திருப்பயணத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும். அசிசி கூட்டம் பல்சமய உரையாடல் கூட்டம். மக்கள் குழுக்கள் மற்றும் தனிமனிதர் ஆகியோரின் தனித்தன்மையை மதிப்பது உரையாடலின் பண்பாகும்," எனத் தெரிவித்தார்.


அசிசி கூட்டத்தின் மையப்பொருள்


அக்டோபர் 27ஆம் நாள் அசிசியில் நிகழவிருக்கின்ற கூட்டத்திற்கு "உண்மையின் திருப்பயணிகள், அமைதியின் திருப்பயணிகள்" என்னும் பொருள் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


காலஞ்சென்ற திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1986 அக்டோபர் 27ஆம் நாள் நிகழ்த்திய "அமைதிக்கான உலக இறைவேண்டல் நாள்" (World Day of Prayer for Peace) என்னும் நிகழ்வின் 25ஆம் ஆண்டு நிறைவாக இக்கொண்டாட்டம் நடைபெறவிருக்கின்றது.


கர்தினால் டர்க்சன் மேலும் கூறியபோது, "25 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததுபோலவே, இன்றைய உலகுக்கும் அமைதி தேவை. உலக சமயங்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு ஒத்துழைத்ததைத் தொடர்ந்து, அந்த ஒத்துழைப்பின் பலன்களை மதிப்பீடு செய்து, புதிய சவால்களை எதிர்கொள்வதற்காக மீண்டும் நம்மை அர்ப்பணிப்பது தேவை," என்றார்.


கத்தோலிக்க இறைவேண்டல் மட்டும் நிகழும்


தம் செய்தி உரையின்போது கர்தினால் டர்க்சன், இந்த ஆண்டு அமைதிக் கூட்டத்தில் நிகழவிருக்கின்ற ஒரே "பொது இறைவேண்டல்" (public prayer) கத்தோலிக்க இறைவேண்டலாகவே இருக்கும் என்றும், அந்த இறைவேண்டலைக் கூட்டத்திற்கு முந்தின நாள் மாலையில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் புனித பேதுரு பெருங்கோவிலில், கத்தோலிக்க நம்பிக்கைகொண்டவர்களோடு முன்னின்று நடத்துவார் என்றும் கூறினார்.


அக்டோபர் 27ஆம் நாள் ஐம்பது நாடுகளிலிருந்து வருகைதரும் 300க்கும் மேற்பட்ட உலக சமயத் தலைவர்கள் வத்திக்கானிலிருந்து சிறப்புத் தொடருந்தில் புறப்பட்டு, 80 மைல் தொலையிலுள்ள அசிசி நகருக்குச் செல்வார்கள். அந்த நகரில்தான் அசிசியின் பிரான்சிசு என்னும் கிறித்தவப் புனிதர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.


அசிசிக்கு வந்ததும் உலக சமயத் தலைவர்கள் "வானதூதர்களின் அன்னை மரியா" (Saint Mary of the Angels) என்னும் கோவிலில் ஒன்றுகூடி, இதற்கு முன் நிகழ்ந்த "உலக அமைதிக் கூட்டங்களின்" பலன்கள் பற்றியும், இன்றைய சவால்கள் பற்றியும் கலந்துரையாடுவார்கள். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டும் உரையாற்றுவார்.


பின்னர் உலக சமயத் தலைவர்கள் சிறிதளவு நண்பகல் உணவு (frugal lunch) அருந்துவார்கள். அருகிலிருக்கும் பிரான்சிஸ்கு சபை விடுதியில் ஒவ்வொருக்கும் ஒரு தனியறை கொடுக்கப்படும். அங்கே அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் அமைதி காத்தல், தியானம் அல்லது இறைவேண்டல் செய்வதில் ஈடுபடலாம்.


மாலை வேளையில் சமயத் தலைவர்கள் அசிசியின் புனித பிரான்சிசு அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்குச் செல்வார்கள். அங்கே, அமைதிக்காக உழைக்கும் தீர்மானத்தைப் புதுப்பிப்பார்கள்.


யூத-கிறித்தவ சமய பிரதிநிதிகள் தவிர, 176 பிற சமயத் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பர். அவர்களுள் 50 பேர் முசுலிம்கள். இந்த எண்ணிக்கை 1986இல் நிகழ்ந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முசுலிம் தலைவர்களைவிட ஐந்து மடங்கு கூடுதல் ஆகும்.


தலாய் லாமா கூட்டத்திற்கு வரவில்லை


"வேறு அலுவல் காரணமாக" தலாய் லாமா இந்த ஆண்டு அசிசி கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்று "நீதி மற்றும் அமைதிக்கான திருத்தந்தை சங்கம்" (Pontifical Council for Justice and Peace) என்னும் வத்திக்கான் அமைப்பின் செயலர் ஆயர் பியேர் செலாட்டா கூறினார்.


கிறித்தவ உலகிலிருந்து 31 பிரதிநிதிகள் பங்கேற்பர். முக்கிய திருச்சபைத் தலைவர்களாகிய காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு, உலக ஆங்கிலிக்கன் திருச்சபைத் தலைவர் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.


நாத்திகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்


இந்த ஆண்டு அசிசி கூட்டத்தில் நான்கு முக்கிய நாத்திகத் தலைவர்களும் பங்கேற்கின்றனர். அவர்கள் ஆத்திரியா நாட்டு பொருளாதார அறிஞர் வால்ட்டர் பையர் (Walter Beier), இத்தாலி நாட்டு போடேயி ரேமோ (Bodei Remo), பிரான்சு நாட்டு ஜூலியா க்றிஸ்டேவா (Julia Kristeva), மெக்சிகோ நாட்டு கில்லேர்மோ ஊர்ட்டாடோ (Guillermo Hurtado) ஆகிய மெய்யியலார் ஆவர்.


இத்தலைவர்களை அழைப்பதற்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முடிவுசெய்தது பற்றி "பண்பாட்டுக்கான திருத்தந்தை சங்கம்" (Pontifical Council for Culture) என்னும் வத்திக்கான் அமைப்பின் அலுவலர் மொன்சிஞ்ஞோர் அந்திரேயா பல்மியேரி (Monsignor Andrea Palmieri) கீழ்வருமாறு கூறினார்: "ஆண் பெண் இருபாலாரும், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கடவுள் பற்றிய தேடலில், பரம்பொருளைக் கண்டடையும் தேடலில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே, எல்லா மனிதருமே உண்மையின் முழுமையை நோக்கிப் பயணம் செய்கின்ற திருப்பயணிகள்தாம். இந்த அடிப்படையில்தான் நாத்திகரையும் அசிசி கூட்டத்திற்கு அழைக்க திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முடிவு செய்தார்."


கத்தோலிக்க கிறித்தவத்தைக் கடுமையாக விமர்சிப்பவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மெய்யியலாருமான ஆண்டனி க்ரேலிங் (Anthony Grayling) என்பவர் கடைசி நேரத்தில் அசிசி கூட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து விலகிக் கொண்டார். அவர் கூறியது: "சமூகத்தில் மதங்கள் வகிக்கும் இடம் என்னவென்பது குறித்து திருத்தந்தையோடு கருத்துப் பரிமாற்றம் நிகழும் என்று முதலில் கூறப்பட்டதாக நான் நினைத்திருந்தேன். ஆனால் இது ஒரு சிறிய நிகழ்ச்சியாகிவிட்டது. அழைக்கப்பட்டவர்கள் திருத்தந்தையோடு திருப்பயணமாகக் கூடச் செல்வதுதான் கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவதால் விலகிக் கொள்ள முடிவுசெய்தேன்."


1986 அசிசி கூட்டத்திற்கும் இவ்வாண்டு கூட்டத்திற்கும் இடையே வேறுபாடு


காலஞ்சென்ற திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் முதன்முறையாக அசிசியில் உலக அமைதியைப் பேணுவதற்காக சமயத் தலைவர்களை ஒன்றுகூட்டி இறைவேண்டல் நிகழ்த்த முடிவுசெய்தார். எனவே அந்த முதல் கூட்டம் ""அமைதிக்கான உலக இறைவேண்டல் நாள்" (World Day of Prayer for Peace) என்று அழைக்கப்பட்டது.


அந்த நிகழ்ச்சியில் 160 உலக சமயத் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஒரு நாள் முழுதும் நோன்பு காத்தலிலும் இறைவேண்டல் செய்வதிலும் செலவிட்டனர். 32 கிறித்தவ சபைகளிலிருந்து பல பிரதிநிதிகளும், 11 கிறித்தவமல்லா சமயங்களிலிருந்து பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.


கத்தோலிக்க சமயத்திற்கும் வேறு சமயங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல், எல்லா சமயத்தாரையும் ஒரே இறைவேண்டல் நிகழ்ச்சியில் இணைத்தது ஏற்புடையதல்ல என்று சில கத்தோலிக்க குழுக்கள் விமர்சித்தன.


அசிசியில் நிகழ்ந்த பிற அமைதி கூட்டங்கள்


1993ஆம் ஆண்டு அசிசியில் உலக அமைதிக்கான பல்சமயக் கூட்டம் நிகழ்ந்தது. அச்சமயம் போஸ்னியாவில் நிகழ்ந்த போர் விரைவில் முடியவேண்டும் என்னும் கருத்துக்காக இறைவேண்டல் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கிறித்தவர், யூதர் மற்றும் முசுலிம்கள் கலந்துகொண்டனர்.


2002ஆம் ஆண்டு, சனவரி 24ஆம் நாள் அசிசியில் நடந்த உலக அமைதிக்கான பல்சமயக் கூட்டத்தில் 200 சமயத் தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் கத்தோலிக்க கிறித்தவ கர்தினால்கள், முசுலிம் இமாம்கள், யூத ரபிக்கள் பங்கேற்றனர். மேலும், புத்த மதம், சீக்கிய மதம், பாகாய் மதம், இந்துமதம், சமண மதம், சரஸ்துத்திர சமயம் போன்ற அமைப்புகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மக்களிடையே போர்களையும் கலவரங்களையும் உருவாக்கும் கருவியாக மதம் மாறிவிடலாகாது என்னும் கருத்தது அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


மூலம்[தொகு]