அல்ஜீரியாவில் 19 ஆண்டு கால அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 26, 2011

அல்ஜீரியாவில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அங்கு கடந்த 19 ஆண்டு காலமாக அமுலில் இருந்த அவசரகாலச் சட்டத்தை அந்நாட்டின் அரசுத்தலைவர் நீக்கியுள்ளார்.


கடந்த வாரம் முழுவதும் தலைநகர் அல்ஜியர்சில் ஆர்ப்பாட்டங்களை நடத்திய எதிர்க்கட்சிக் குழுக்களின் கோரிக்கைகளில் அவசரகால நிலையைத் தளர்த்துவதும் ஒன்றாகும். அவசரகாலச் சட்டத்தை நீக்கியதநை அடுத்து உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்சினைகளில் இராணுவத்தினரின் தலையீடு மிககுறைந்தளவே இருக்கும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


கடந்த சில வாரங்களாக அரபுலக நாடுகளை உலுக்கிவரும் மக்கள் கிளர்ச்சிகள் தமது நாட்டிலும் உருவாவதைத் தவிர்க்கும் வகையிலேயே அரசு இந்த அறிவித்தலை விடுத்திருக்கிறது. எனினும், அவசரகாலச் சட்டம் நீக்கியமை ஒரு சிறு வெற்றி மட்டும் எனவே கருதப்படுகிறது. தலைநகர் அல்ஜியர்சில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்படுவது தொடர்ந்து தடை செய்யப்பட்டே இருக்கும் என உட்துறை அமைச்சர் டாகூ ஊல்ட் கபிலா தெரிவித்தார். அல்ஜீரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயம் எப்போதும் இருந்து வருகின்றது என அவர் குறிப்பிட்டார்.


இதேவேளை அவசரகால நிலை முடிவுக்குக் கொண்டவரப்பட்டதை வரவேற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எனினும் அல்ஜீரிய அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]