அல்லா விவகாரம்: மலேசியாவில் கிறித்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 8, 2010



மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று ஐந்து கிறித்தவத் தேவாலயங்கள் முஸ்லிம்களால் தாக்குதலுக்குள்ளாயின. கடவுள் என்ற சொல்லுக்கு மொழி பெயர்ப்பாக கிறிஸ்துவர்கள் 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மீது சினமடைந்துள்ள முஸ்லிம் அமைப்புக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதற்கு முன்னதாக அந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.


சமய வழிபாட்டுக் கட்டிடங்களுக்கு நெருப்பு வைக்கப்படாலம் என்ற அச்சத்தைத் தொடர்ந்து எல்லா தீயணைப்பு நிலையங்களும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மீட்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.


கோலாலம்பூர் தேசா மெலாவத்தியில் அமைந்துள்ள மூன்று மாடி மெட்ரோ டாபெர்னக்கல் தேவாலயத்தின் கீழ்தளம் நேற்று நள்ளிரவில் தீக்கிரையானதாக தேவாலயத் தலைவர் பீட்டர் இயாவ் கூறினார். நான்கு பேர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தேவாலயக் கட்டிடத்திற்குள் தீக்குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். அந்தச் சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் இல்லை.


இதனிடையே அந்தச் சம்பவத்தை விசாரிப்பதில் தடயவியல் நிபுணர்கள் போலீசாருடனும் மோப்ப நாய் பிரிவுடனும் இணைந்து செயல்படுவதாக தீயணைப்பு பணிகளுக்கு பொறுபேற்றிருந்த அனுவார் ஹரூன் கூறினார்.


இதற்கிடையில், இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் மூன்று பள்ளிவாசல்களில் அல்லாஹ் விவகாரம் தொடர்பாக நடந்த எதிர்ப்புப் போராட்டம் மிக அமைதியான முறையில் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று தேசிய பள்ளிவாசலில் நடைபெற்ற போராட்டம் அமைதியான முறையில் 30 நிமிடங்கள் இடம்பெற்றது. டாங் வாங்கி காவல் நிலையத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக புகார் அளித்தனர்.


மலேசியாவில் கத்தோலிக்க வார இதழான தி ஹெரால்ட், "அல்லா" என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம் என்று சென்ற வாரம் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]