அழிந்து வரும் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங்கள்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 15, 2014

ஆப்பிரிக்காவிற்கே உரிய சிங்க இனமான மேற்கு ஆப்பிரிக்கச் சிங்கங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக அஞ்சப்படுகின்றது. பந்தேரா எனும் தன்னார்வ நிறுவனம் தற்போதைய கணக்கெடுப்பின் படி சுமார் 400 ஆப்பிரிக்க சிங்கங்கள் மட்டுமே அப்பிரதேசங்களில் எஞ்சியிருப்பதாக அறிவித்துள்ளது. இவ்வமைப்பு உலகமெங்கும் பூனை வகை உயிரினங்களின் பாதுகாப்பு பற்றி விழிப்புடன் செயற்பட்டுவருகின்றது.


ஒரு மேற்கு ஆபிரிக்கச் சிங்கத்தின் குடும்பம்

செனகல் முதல் நைஜீரியா வரை சுமார் ஆறு ஆண்டுகள் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் முடிவாகவே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பாரம்பரியமாக ஆபிரிக்க சிங்கங்கள் வாழ்ந்து வந்த வாழ்விடங்களின் 99% விவசாயம் போன்ற தேவைகளுக்காக அழிவடைந்து தற்போது வெறும் ஒரு வீதம் மட்டுமே எஞ்சியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அழிவின் விளிம்பில் இருக்கும் சிங்கங்களைக் காப்பதற்கான நிதிவசதி அந்தப்பகுதி அரசுகளுக்கு இல்லை என்றும் சிங்கங்களைக் காப்பதைவிட முக்கியமான முன்னுரிமை கூடிய மக்களின் வறுமை போன்ற பல காரியங்கள் இந்த அரசுகளின் முன்னால் இறைந்து கிடப்பதனால் இந்த சிங்கங்களில் அழிவு மேலும் உறுதிப்படுத்தப்படுவதாக அஞ்சப்படுகின்றது.


மேலும் பந்தேரா நிறுவனம் சிங்கங்களை அழிவின் விளிம்புக்குச் சென்றுள்ள விலங்குகள் என்று பட்டியலிடவேண்டும் என்றும், இந்த மேற்கு ஆபிரிக்கச் சிங்கங்களின் பாதுகாப்பிற்காக மேலும் பல சர்வதேச உதவிகள் வழங்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளது. இதைவிட சட்டவிரோத வேட்டைக்காரர்கள், கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், புகைப்படம் எடுக்க விரும்பும் ஆர்வலர்களை இப்பகுதிகளுக்கு அழைத்து வந்து அதன் மூலம் பெறும் பணத்தில் இப்பகுதிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று பரிந்துரை வழங்கியுள்ளனர்.


மூலம்[தொகு]