ஆத்திரேலியாவினுள் நுழைய முயன்ற இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 11, 2009


ஆஸ்திரேலியாவுக்குள் கப்பல் மூலம் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 260 இலங்கையர்களைத் தடுத்துவைத்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


குடியேறிகள் போன்று தென்படுபவர்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்று ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் இடைமறிக்கப்பட்டதாக இந்தோனீசிய கடற்படைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.


இதன் பின்னர் மேலும் சில இந்தோனேசிய போர் கப்பல்களை ஜாவா தீவின் பென்டன் மாகாண கடற்பரப்புக்கு அனுப்பி, அங்கிருந்த அகதிகளை மீட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குடியேற்றத்துறை அலுவலகத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த குழுவில் ஏராளமான சிறுவர்களும் பெண்களும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து கடந்த மே மாதத்தில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்குமிடையிலான மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மூலம்