இலங்கையின் முன்னாள் படைத் தளபதி மீது போர்க்குற்ற விசாரணை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 2, 2009


அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் படைத்தளபதியும் தற்போதைய கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரியுமான சரத் பொன்சேகாவிடம் விடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்தினருக்கும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை இது பற்றி அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்துள்ள சரத் பொன்சேகா தனது மருமகனின் தொலைபேசி ஊடாக அமெரிக்க அதிகாரிகள் இவ் கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


அமெரிக்கவில் வசிக்கும் உரிமை வழங்கும் பச்சை அட்டை பெற்றிருக்கும் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அந்நாட்டு உள்விவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி சரத் பொன்சேகாவுடன் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கிறீன்கார்ட் சலுகையை நீடித்துக் கொள்ளும் நோக்கில் சரத் பொன்சேகாவும், அவரது பாரியார் அனோமாவும் கடந்த 23 ஆம் திகதி அமெரிக்கா சென்றுள்ளனர்.


மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அமெரிக்க உள்விவகாரத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது. கிறீன் கார்ட் , மற்றும் அமெரிக்க பிரஜைகள் அந்நாட்டு சட்டத் திணைக்களங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது. இதன்படி, அமெரிக்க உள்விவகாரத் திணைக்களம் நடத்தும் விசாரணைகளுக்கு சரத் பொன்சேகா கட்டுப்பட வேண்டியவர் என்பதுடன் பதிலளிக்கவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயற்சித்த விடுதலைப் புலி போராளிகள் மற்றும் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதி அம்பலாங்கொடையில் நடைபெற்ற விழாவொன்றில் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]