இலங்கையில் மிக்-27 ரக போர் விமானம் வீழ்ந்து நொறுங்கியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 14, 2012

இலங்கை விமான படையினருக்குச் சொந்தமான மிக்-27 ரக போர் விமானம் ஒன்று புத்தளம் நாத்தாண்டிய தும்மலசூரிய பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் கூறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வழமையான பயிற்சிக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் 17 மைல் தொலைவில் நேற்று 1.35 மணியளவில் விபத்துக்குள்ளாகியது.


படிமம்:Sri Lanka Air Force MiG-27.jpg
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான மிக்-27 போர் விமானம்

விமானத்தை செலுத்திய விமானி பிளைட் லெப்டினன்ட் தரிது ஹேரத் உயிர் தப்பியுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் அன்ட்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார். விமானம் வீழ்வதற்கு முன்னரே விமானத்திலிருந்து விமானி வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளார். தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணம் என நம்பபடுகிறது.


விமானம் வீழ்ந்த இடத்தில் உடைமைகளுக்கோ அல்லது ஆட்களுக்கோ ஏதும் சேதம் ஏற்படவில்லை என விமானப் படை தெரிவித்துள்ளது. இவ்விபத்துத் தொடர்பாக தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என விமானப்படைத் தலைவர் அர்சா அபேவிக்கிரம தெரிவித்தார்.


இலங்கை விமானப்படை உருசியத் தயாரிப்பான மிக்-27 போர் விமானங்களை தரைத்தாக்குதல், மற்றும் வான் உதவி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகிறது. 2000 ஆம் ஆண்டில் இவை இலங்கையில் சேவைக்கு விடப்பட்டன. ஈழப்போரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் மிக்-27 போர் விமானம் ஒன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வீழ்ந்து நொறுங்கியதில் உக்ரேனிய விமானி ஒருவர் கொல்லப்பட்டார். 2001 சூலையில், விடுதலைப் புலிகளினால் மிக்-27 விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. 2004 சூன் மாதத்தில் வேறொரு மிக்-27 விமானம் கட்டுநாயக்காவிற்கு அருகில் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.


மூலம்[தொகு]