உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கலந்து கொண்டார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 26, 2010


ஈழத்தமிழர்களின் மீள் குடியேற்ற விடயத்தில் இலங்கை அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது. இது தொடர்ந்தால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயப்படும் என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுன் தன்னைச் சந்தித்த உலகத் தமிழ் பேரவையினரிடம் உறுதி தெரிவித்துள்ளார்.


பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுன்

லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உலகத்தமிழர் பேரவையின் 'தமிழீழ விடுதலை நோக்கிய பயண' நிகழ்வு ஆரம்பமானது.


தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மில்லிபான்ட் தொடக்கி வைத்துப் பேசினார்.


"நாடாளுமன்றத்திற்கு வருகைதந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பளிக்க நான் விரும்புகிறேன். இதனை மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக நான் கருதுகின்றேன். 14 நாடுகளிலிருந்து மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றனர். இது பாரியதொரு வெற்றியாகும். உலகளாவிய ரீதியில் பரவியிருக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் சுவாசத்தின் வெளிப்பாடாக இது காணப்படுகிறது. இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றுக்கு சேவையாற்றக்கூடிய ஐக்கியம் குறித்ததாக இந்த மாநாடு அமையுமென்று நான் எதிர்பார்க்கிறேன். தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று பட்டு, ஓர் அணியில் செயல்பட வேண்டும் என்றும், இன்றைய சூழலில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் எடுத்து வைக்க வேண்டும்", என்றும் மிலிபாண்ட் வலியுறுத்தினார்.


தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று பட்டு, ஓர் அணியில் செயல்பட வேண்டும் என்றும், இன்றைய சூழலில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் எடுத்து வைக்க வேண்டும்.

—டேவிட் மில்லிபாண்ட்

இந்த மாநாட்டிற்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகைதந்திருந்த தூதுக் குழுவினரை பிரதமர் கோர்டன் பிறவுண் சந்தித்ததாக பி.பி.சி. செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது


நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்ற சந்திப்பில், உலகத் தமிழர் பேரவை முன்னெடுக்கவுள்ள மக்களை விடுவித்தல், போர்க்குற்ற விசாரணைக்கான செயற்பாடுகள், மற்றும் மக்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தமிழீழ மக்களின் அரசியல் விருப்பங்கள், நோக்கங்கள் பற்றியும் விவரமாக எடுத்துரைக்கப்பட்டது.


இதற்குப் பதிலளித்த பிரிட்டிஷ் பிரதமர், "இலங்கை அரசுக்குக்கான தமது அழுத்தம் தொடர்ந்து வருவதாகவும், அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற்றபோதுகூட அரசின் ஐனநாயக விரோதப்போக்கைக் கண்டித்து" கடிதம் எழுத்தியிருந்ததாகவும் தெரிவித்தார்.


தமிழ் மக்களின் மீள் குடியேற்ற விஷயத்தில் இலங்கை அரசு தொடர்ந்து இதே அலட்சியத் தன்மையைக் கடைப்பிடித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயப்படும் எனவும் பிரவுன் கூறினார்.


பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்தவிடாது தடுத்து, ஆஸ்திரேலியாவில் நடத்துவதற்கு தான் ஏற்பாடு செய்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரித்தானியப் பிரதமர், தமது அரசு முடிந்தளவு மேலும் பல அழுத்தங்களை இலங்கை அரசுக்குக் கொடுக்கும் எனக் கூறினார்.


இதற்கிடையில், உலகத் தமிழர் அமைப்பின் லண்டன் மாநாட்டில் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்துகொண்டதையிட்டு இலங்கை அரசாங்கம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருக்கிறது. நேற்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித்த போகொல்லாகம இலங்கைக்கான பிரித்தானியத் தூதரை நேரில் அழைத்துத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

மூலம்