குவாத்தமாலாவில் எரிமலை சீறியது, நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 29, 2010


வட அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் பக்காயா என்ற எரிமலை வெடிக்க ஆரம்பித்ததை அடுத்து நூற்றுக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறினர்.


1976 ஆம் ஆண்டில் பக்காயா எரிமலை வெடித்தது

சென்ற வியாழக்கிழமை பக்காயா எறி கற்குழம்புகளை வீச ஆரம்பித்ததில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தலைநகரில் இருந்து 30 கிமீ தெற்கே அமைந்துள்ள இந்த எரிமலையில் இருந்து கக்கும் கற்குழம்புகளில் இருந்து தப்புவதற்காக குறைந்தது 1,600 பேர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.


தலைநகர் குவாத்தமாலா நகரத்தின் பெரும்பகுதி தூசுகளினால் மூடப்பட்டுள்ளதாகவும், லா அவுரோரா என்ற முக்கிய பன்னாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். விமான சேவைகள் அனைத்தும் நாட்டின் ஏனைய விமான நிலையங்களுக்குத் திசை திருப்பப்ட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


பக்கயாவுக்கு அருகாமையில் உள்ள கால்டெராஸ் என்ற கிராமத்தில் இருந்து வெளியேறிய பிரெண்டா காஸ்டெனாடா என்பவர் தனது வீட்டின் மீது கற்குழம்புகள் விழுந்ததை அடுத்து தாம் எப்படி தப்பித்தோம் என்பதை விபரித்தார். ”எமது குடும்பம் முழுவதும் கட்டில்களுக்கு அடியில் பதுங்கி இருந்து தப்பி ஓடி வந்தோம். எமது வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன”, என்றார் அவர்.


குவாத்தமாலாவின் அரசுத்தலைவர் அல்வாரோ கொலம் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதி அனைத்திலும் அவசரகால நிலையைப் பிறப்பித்துள்ளார்.


தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் கற்குழம்புகளினால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். 100 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த எரிமலை கடைசியாக 2000 ஆம் ஆண்டு சனவரியில் வெடித்திருந்தது.

மூலம்[தொகு]