கொலம்பியாவில் மனித உரிமை ஆர்வலர் படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 20, 2010

கொலம்பியாவில் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது கொலை குறித்து உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.


59 அகவையுடைய ஜொனி ஹுர்ட்டாடோ என்ற விவசாயி கொலம்பியாவின் லா கட்டலீனா என்ற இடத்தில் உள்ள அவரது பண்ணையில் வைத்து சென்ற திங்கட்கிழமை மார்ச் 16 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இப்பகுதியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து இவர் அண்மையில் பிரித்தானியாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறியிருந்தார்.


இக்கொலை குறித்து தாம் மிகவும் வருந்துவதாகவும் கொலம்பிய அரசு இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


"கொலை செய்யப்பட்ட நேரத்தில் கொலம்பிய இராணுவத்தினர் பெருமளவில் அந்த இடத்தில் குவிந்திருந்ததாக தமக்குச் செய்திகள் கிடைத்திருக்கின்றன,” என அவர்கள் கொலம்பிய அரசுத்தலைவர் அல்வாரோ வெலசிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கின்றனர்.


கொலம்பிய அதிகாரிகள் இக்கொலை குறித்து கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், கொலை நடந்த பகுதி சிறப்பு இராணுவப் பிரிவினரால் நிருவகிக்கப்பட்டு வருவதாகவும், தமது இராணுவத்தினர் அங்கு இருக்கவில்லை எனவும் தேசியக் காவல்துறைத் தலைவர் சஜெனரல் ஒர்லாண்டோ பயெஸ் தெரிவித்தார்.

மூலம்[தொகு]