சூடானில் இடம்பெற்ற மோதல்களில் 75 படையினர், 300 போராளிகள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 19, 2010


சூடானின் சர்ச்சைக்குரிய தார்புர் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கடும் மோதல்களில் 75 இராணுவ வீரர்களும் முன்னூறு போராளிகளும் கொல்லப்பட்டதாக சூடானிய இராணுவத்தினர் தெரிவித்தனர்.


சூடானின் தார்புர் பிராந்தியம்

ஜே.இ.எம். (JEM) என அழைக்கப்படும் நீதி மற்றும் சமத்துவ இயக்கப் போராளிகளுடன் இடம்பெற்ற இந்தச் சமர்களில் மேலும் 86 போராளிகளைத் தாம் கைது செய்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் அல்-தாயெப் அல்-முஸ்பா ஒஸ்மான் தெரிவித்தார். இராணுவத்தினர் கூடுதலாக உயிரிழந்த மோதல் சம்பவம் இதுவென அவர் தெரிவித்தார். போராளிகள் வாகனங்கள் பல அழிக்கப்பட்டன.


போராளிகள் அமைப்பு இராணுவத்தினரின் கூற்றை மறுத்துள்ளனர். தாம் இராணுவத்தினரின் தாக்குதலை முறியடித்ததாகவும் இராணுவத்தினருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


கடந்த மே மாதத்தில் இடம்பெற்ற மோதல்களில் நூற்றுக்கனக்கான போராளிகள் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் அறிவித்திருந்தனர்.


சூடானின் தார்புர் பிராந்தியத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் மோசமான வன்முறைகள் தலைதூக்கின. அரசுக்கெதிரான போரில் ஜே.ஈ.எம், சூடான் விடுதலை இயக்கம் (எஸ்.எல்.ஏ) போன்ற அமைப்புக்கள் ஆயுதப் போரில் இறங்கியுள்ளன. இதனால் மூன்று இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் 27 இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.


ஆனால் 10 ஆயிரம் பேரே இறந்துள்ளதாக சூடான் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான கொலைக் குற்றச்சாட்டில் சூடான் அரசுத்தலைவர் ஒமர் அல் பஷீருக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதற்கு முன்னர் ஜே.ஈ.எம். அமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் அவை வெற்றியளிக்கவில்லை. சூடான் அரபு அரசாங்கத்துக்கெதிராக தார்புரிலுள்ள சிறுபான்மையினர் போரில் இறங்கியுள்ளனர்.

மூலம்[தொகு]