டைட்டானிக் கப்பல் மூழ்கிய 100வது ஆண்டு நிறைவு நினைவு கூரப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 15, 2012

டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டிய நினைவுகூரும் நிகழ்ச்சிகள் கப்பலின் பிறந்த இடமான பெல்பாஸ்ட் நகரம் உட்பட உலகெங்கும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.


வில்லி ஸ்டோவரின் கைவண்ணத்தில் டைட்டானிக் மூழ்கும் நிகழ்வு

கப்பல் மூழ்கிய வடக்கு அத்திலாந்திக் கடலில் எம்எஸ் பால்மோரல் என்ற பயணிகள் கப்பலில் நினைவு நிகழ்வு நடைபெற்றது. இறந்த 1,517 பேரையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிட நேரம் மௌனம் செலுத்தப்பட்டு கடலில் மலர்களும் தூவப்பட்டன. இறந்தவர்களின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


பெல்பாஸ்ட் நகரில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுத்தூபி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. பெயர்கள் அகரவரிசைப்படி பொறிக்கப்பட்டிருந்தன. அக்காலத்தில் மிகப் பெரிய சொகுசுக் கப்பலான டைட்டானிக் வட அயர்லாந்தின் தலைநகர் பெல்பாஸ்டில் தயாரிக்கப்பட்டது. நிகழ்வில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.


டைட்டானிக் கப்பல் சென்றிறங்க வேண்டியிருந்த நியூயோர்க் நகரத்திலும் மற்றும் பல இடங்களிலும் நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.


கோடீசுவரர்கள் முதல் ஏழை குடியேற்றவாதிகள் வரை 1,300 பயணிகளும், 900 சிப்பந்திகளும் டைட்டானிக்கில் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து 1912 ஏப்ரல் 10 ஆம் நாள் தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்திருந்தது. நியூயோர்க் செல்வதற்கு முன்னர் பிரான்சின் செர்பூர்க், அயர்லாந்தின் குயீன்ஸ்டவுன் ஆகிய துறைமுகங்களிலும் தரித்துச் சென்றது.


1912 ஏப்ரல் 14 உள்ளூர் நேரம் 23:40 மணிக்கு பனிப்பாறை ஒன்றுடன் கப்பல் மோதியது. கப்பல் முழுமையாக மூழ்க இரண்டரை மணி நேரம் பிடித்தது. மொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் 28 °F (-2 °C) குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]