தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி
Wikinews தளத்திலிருந்து
திங்கள், அக்டோபர் 12, 2009
தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி வகை ஒன்று பற்றிய தகவல்களை அறிவியலாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.
பகீரா கிப்லிங்கி (Bagheera kiplingi) எனப்படும் இவ்வகை சிலந்திகள் நடு அமெரிக்காவிலும், மெக்சிக்கோவிலும் வாழ்ந்து வருகின்றன. இவையே சிலந்தி வகைகளில் தாவர உணவை மட்டும் உண்பவை. இவற்றைவிட ஏனைய இதுவரையில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 40,000 சிலந்தி வகைகள அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும்.
இது குறித்த ஆய்வுக் கட்டுரை "நடப்பு உயிரியல்" என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில், பென்சில்வேனியாவின் விலனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கறி என்பவரின் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பாயும் சிலந்திதேள் வகுப்பு வகுப்பைச் சேர்ந்த இவை 5-6மிமீ நீளமானவை. புரதங்கள் நிறைந்த அக்காசியா வகைத் தாவரங்களின் குருத்துக்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. ஆனாலும் இம்மரத்தின் இலைகளை அடைவதற்கு இச்சிலந்தி அம்மரங்களின் துளைகளில் வாழும் எறும்புகளை விலக்கியே வர வேண்டியிருக்கிறது.
| தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இதுவொன்றே. | ||
|
—பேராசிரியர் ராபர்ட் கறி |
||
இவ்வகை சிலந்திகளின் ஊனுண்ணாமை முதற் தடவையாக கொஸ்டா ரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் எரிக் ஒல்சென் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் மீகன் என்பவரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தற்போது பேராசிரியர் கறியின் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கறி இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், "தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இதுவொன்றே" எனத் தெரிவித்தார்.
"இவை பாயும் சிலந்திகளாதலால், தமது உணவுக்காக வலைகளைப் பின்ன வேண்டியதில்லை. அவ்வப்போது எறும்புகளால் அக்கேசியா தாவரங்கள் சூழப்படும் போது மாத்திரம் கீழ் இறங்கிய பின்னர் எறும்புகள் திரும்பிவிட அவையும் மீண்டும் ஏறிவிடுகின்றன. அத்துடன் அவற்றிற்கு போசரணக்குறைபாடு ஏற்படும் இடத்து எறும்புகளில் குடம்பிகளை உடைத்து அதன் சாற்றையும் குடிக்கின்றன."
"அக்காசியாக்கள் ஆண்டு முழுவதும் இலைகளைத் தருவதால் இச்சிலந்திகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை," இவ்வாறு தெரிவித்தார் பேராசிரியர் ராபர்ட் கறி.
[தொகு] மூலம்
- ரெபெக்கா மொரேல் "'Veggie' spider shuns meat diet". பிபிசி, அக்டோபர் 12, 2009