தில்லி உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு, 10 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்தெம்பர் 7, 2011

இந்தியத் தலைநகர் தில்லியில் உயர்நீதிமன்ற வாயிலில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 47 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


உயர்நீதிமன்றத்தின் முக்கிய வாயிலில் வைக்கப்பட்டிருந்த பயணப் பொதி ஒன்று இன்று காலை 10:17 மணியளவில் வெடித்துள்ளது. காயமடைந்தவர்கள் ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அதிக பாதுகாப்பு மிகுந்த இந்த பகுதியில் நன்கு திட்டமிட்டே இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது என பாதுகாப்புத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை என்பதால் அப்பகுதியில் வழக்கறிஞர்களும் சாட்சிகளும் பெருமளவில் கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


"இது ஒரு கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்," எனப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.


ஹர்க்காத்-உல் ஜிகாத் (ஹூஜி) என்ற தீவிரவாதக் குழு இக்குண்டுவெடிப்புக்குப் பொறுப்பேற்பதாக மின்னஞ்சல் தெரிவித்துள்ளது. இம்மாஞ்சல் குறித்து நாம் ஆராய்ந்து வருகிறோம் என இந்திய தேசியப் புலனாய்வுத்துறைத் தலைவர் எஸ். சி. சின்ஹா தெரிவித்துள்ளார். ஹூஜி என்ற இக்குழு அல்-கைதாவுடன் தொடர்புடையதாக அமெரிக்க அரசுத் திணைக்களம் கூறியிருக்கிறது. 2007 மேயில் இடம்பெற்ற ஐதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, மார்ச் 2006 வாரனாசி தாக்குதல் ஆகியவற்றுக்கு இக்குழுவே பொறுப்பு என அமரிக்க அரசுத் திணைக்களம் கூறுகிறது.


கடந்த சூன் மாதத்தில் வட-மேற்கு பாக்கித்தானில் இடம்பெற்ற அமெரிக்க வான் தாக்குதலில் ஹூஜி அமைப்பின் தலைவர் இலியாஸ் காஷ்மீரி என்பவர் கொல்லப்பட்டிருந்தார்.


மூலம்[தொகு]