தீவிரவாதிகளுடன் தொடர்பு: பிரெஞ்சு அணு ஆய்வாளர் பாரிசில் கைது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 12, 2009

சுவிட்சர்லாந்து-பிரெஞ்சு எல்லையில் அமைந்துள்ள செர்ன் ஆய்வு மையத்தின் தோற்றம்


பிரான்சைச் சேர்ந்த அணு அறிவியலாளர் ஒருவர் அல்-கைடாவுடன் தொடர்பு வைத்திருந்ததையடுத்து பாரிசில் கைது செய்யப்பட்டுள்ளார்.


அல்ஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கொண்ட பிரான்சைச் சேர்ந்த டாக்டர் அடலீன் எசெர் (32) என்ற அந்த அறிவியலாளர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா அருகே அமைக்கப்பட்டுள்ள செர்ன் என்ன்ற அணுப்பிளவு ஆய்வு மையத்தின் பெரிய ஆட்ரான் மோதுவி (Large Hadron Collider) உள்ள ஆய்வுகூடத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தவர். லண்டனில் ரத்தர்போர்ட் ஆப்பிள்டன் ஆய்வுகூடம் என்ற அரசின் மிக ரகசியமான அணு ஆய்வு மையத்திலும் இவர் பணியாற்றியிருந்தார்.


இவர் அல்-கைடாவின் வட ஆப்பிரிக்கப் பிரிவுடன் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பில் இருந்ததை பிரெஞ்சு உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து இவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.


மேற்கத்திய நாடுகளைத் தாக்குவது, குறிப்பாக பிரித்தானியாவைத் தாக்குவது தொடர்பான அல்-கைடாவின் திட்டங்களுக்கு இவர் பல தகவல்களைத் தந்து வந்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணு ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இவர் அல்-கைடாவுடன் இணைந்து திட்டமிட்டு வந்துள்ளார்.


அடலீன் எசெரின் மின்னஞ்சல்களை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கண்காணித்து, அவருக்கு அல்-கைடாவுடன் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்து இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உளவுப் பிரிவினருக்குத் தகவல் தந்துள்ளனர். இவரது செயல்களை இரகசியமாக கண்காணித்து வந்த பிரெஞ்சு மற்றும் இஙகிலாந்தின் உளவுப் பிரிவினர் போதிய ஆதாரங்கள் சிக்கியதையடுத்து இவரைக் கைது செய்தனர். தனது குற்றங்களை இவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவருடன் கைது செய்யப்பட்ட இவரது தம்பி டாக்டர் அலீம் விடுவிக்கப்பட்டுவிட்டார்.

மூலம்