நாசாவின் குளோரி செய்மதித் திட்டம் தோல்வியில் முடிந்தது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 5, 2011

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் கலிபோர்னியாவில் இருந்து நேற்று அனுப்பப்பட்ட குளோரி என்ற செய்மதி ஏவிய சில நிமிட நேரத்தில் குறித்த இலக்கை அடையாமல் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது. காலநிலையில் வாயுத்தொங்கல்களின் (aerosol) தாக்கத்தினை அறிவதற்காக இச்செய்மதி உருவாக்கப்பட்டது. இதன் தோல்வியினால் நாசாவிற்கு 424 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்படுகிறது.


குளோரி விண்கலம்

செய்மதி புறப்படுவதற்கு முன்னர் எவ்வித வழுவும் இருக்கவில்லை என நாசா அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனாலும் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் இழுவைக் குறைப்பமைவு (fairing) எனப்படும் விலகல் இடம்பெறவில்லை. "கோள்ப்பாதையில் செலுத்த எம்மால் முடியவில்லை. செய்மதியும், அதனைக் கொண்டு சென்ற ஏவுகணையும் பசிபிக் கடலின் தென்பகுதியில் ஏதோ ஒரு இடத்தில் வீழ்ந்திருக்க வேண்டும் என நம்புகிறோம்," என அவர் கூறினார்.


இந்த செய்மதி கடந்த பெப்ரவரி 23 இல் செலுத்தப்படுவதாக இருந்தது. ஆனாலும் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் அவதானிக்கப்பட்ட ஒரு வழுவினால் அது புறப்படுவது தாமதிக்கப்பட்டது.


இதே போன்றதொரு நிகழ்வு 2009 பெப்ரவரியிலும் இடம்பெற்றது. அப்போது உலகளாவிய ரீதியில் காபனீரொக்சைட்டின் அளவைக் கணிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட செய்மதி ஒன்று கிளம்பிய சில நிமிட நேரத்தில் அண்டார்க்ட்டிக்காவுக்கு அருகில் உள்ள பெருங்கடலில் வீழ்ந்தது.


528 கிகி எடையுள்ள குளோரி இரண்டு முக்கிய உபகரணங்களைக் கொண்டு சென்றது. இது பூமியில் இருந்து 630 கிமீ உயரத்தில் பூமியைச் சுற்றி வர இருந்தது. பின்னர் இது நசாவினால் அனுப்பப்பட்ட "A-Train" என்ற புவி அவதான திட்ட செய்மதிகளுடன் இணைவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் ஏற்கனவே அக்குவா (Aqua), கிளௌட்சாட் (Cloudsat), கலிப்சோ (Calipso), பாரசோல் (Parasol), அவுரா (Aura) என ஐந்து செய்மதிகள் இயங்குகின்றன.


மூலம்[தொகு]