நிலநடுக்கம் நியூசிலாந்தை ஆஸ்திரேலியா நோக்கி நகர்த்தியது

விக்கிசெய்தி இலிருந்து
நியூசிலாந்தின் செய்மதிப் படம்

புதன், சூலை 22, 2009 நியூசிலாந்து:


கடந்த வாரம் நியூசிலாந்தில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தால் அதன் தெற்குத் தீவு 30 சமீ அளவுக்கு இடம் பெயர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது. செய்மதிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.


ஜூலை 15 இல் நியூசிலாந்தை மிகக் கடுமையான நிலநடுக்கம் தாக்கியது. இதில் அதன் தெற்குத்தீவே அதிகமான பாதிப்புக்குள்ளானது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் தான் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பதிவான மிகப் பெரிய நிலநடுக்கமாகும். நியூசிலாந்து 80 ஆண்டுகளி்ல் சந்தித்திராத மாபெரும் நிலநடுக்கம் இது.


வடக்கு, தெற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு தென் கிழக்கே 2,250 கிமீ தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது.


இந்த நிலநடுக்கத்தால் அதன் தெற்குத் தீவு 30 சமீ (12 அங்) மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியா பக்கமாக நகர்ந்துள்ளது நியூசிலாந்து. தெற்குத் தீவின் தென்மேற்குப் பகுதியே 30 சமீ நகர்துள்ளதெனின்ய்ம் அதன் கிழக்குக் கரை மேற்குப்பக்கமாக 1 செமீ தூரமே நகர்ந்துள்ளது. ”ஜிஎன்எஸ் அறிவியல்” என்ற நியூசிலாந்தின் அரச ஆய்வு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மிகச் சிறிய 1 மீட்டர் சுனாமி அலையே ஏற்பட்டதும், பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படாததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் இரு கண்டத் திட்டுகளுக்கு நடுவில் உள்ள மெதுவான பகுதியில் ஏற்பட்டதால் பாதி்ப்பு பெரிதாக இல்லை என்று நியூசிலாந்து அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


இந்த நிலநடுக்கத்தால் அதிக அதிர்வு கொண்ட அலைகள் ஏற்படாமல் குறைவான அதிர்வுகளே ஏற்பட்டதாகவும் இதனால் கட்டடங்களுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்[தொகு]