நேட்டோ படையினரின் வான் தாக்குதலில் ஆப்கானியர்கள் பலர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 22, 2010


தெற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது படையினர் நடத்திய வான் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதை நேட்டோ உறுதி செய்துள்ளது.


உருஸ்கான் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் 21 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக வந்து கொண்டிருந்த போராளிகளை நோக்கியே தாக்குதல் நடத்தப்பட்டதாக நேட்டோ தெரிவித்தது.


தாக்குதலின் பின்னர் தரைப்படையினர் உடனடியாக அங்கு விரைந்து பார்த்ததில் கொல்லப்பட்டவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களின் சடலங்கள் இருந்ததாக நேட்டோவின் அறிக்கை கூறுகிறது.


உருஸ்கான் மாகாணத்திலேயே கிட்டத்தட்ட 2,000 டச்சுப் படையினர் 2006 ஆம் ஆண்டில் இருந்து நிலைகொண்டுள்ளனர்.


இத்தாக்குதல் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ தளபதி ஜெனரல் ஸ்டான்லி மக்கிரிஸ்டல் ஆப்கானிய அரசுத்தலைவரிடம் மன்னிப்புக் கோரினார். முழுமையான விசாரணை இடம்பெறும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

மூலம்[தொகு]