பங்கு மோசடியில் ஈடுபட்ட ராஜ் ராஜரத்தினத்திற்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 14, 2011

அமெரிக்காவின் முன்னாள் செல்வந்தர் ராஜ் ராஜரத்தினம் உட்தகவல் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட வழக்கில் நேற்று வியாழக்கிழமை நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜரத்தினம் (அகவை 54), உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் 236ம் இடத்தில் இருந்தார். நியூயோர்க்கில் கெலோன் குழுமத்தை ஆரம்பித்து, அமெரிக்க பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்தார். பன்னாட்டு நிறுவனங்களில் உயர்மட்டத்திலுள்ள நண்பர்கள், நெருங்கியவர்கள் மூலம் தகவல்களைப் பெற்று, அதன் மூலம் பிரபல நிறுவனங்களின் பங்குகளை, அதிக விலைக்கு விற்றும், குறைந்த விலைக்கு வாங்கியும் லாபம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. அதன் மூலம் 75 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கோல்ட்மேன் சாக்ஸ், இன்டேல், ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை ராஜ் ராஜரத்தினம் வாங்கி விற்றுள்ளார்.


2007ம் ஆண்டு இவரது கெலோன் நிறுவனத்தின் மதிப்பு பல கோடியை எட்டியது. இந் நிலையில் இவரது செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அமெரிக்க நிதித்துறையினர் இவரை கண்காணிக்க ஆரம்பித்தனர். இவரது தொலைபேசிகள், பேக்ஸ், மெயில் ஆகியவை உளவு பார்க்கப்பட்டபோது, இவரது மோசடிகள் அம்பலத்துக்கு வந்தன. கிட்டத்தட்ட இவரை 1 ஆண்டு காலமாக இரகசியமாகக் கண்காணித்த உளவுத்துறையினர் 2009ஆம் ஆண்டு அவ‌ரைக் கைது செய்‌தனர். அவர் மீது 14 குற்றச்சா‌ட்டுகள் கூற‌ப்ப‌ட்டன. ‌நியுயார்க் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில், 12 நீதிபதிகளை கொண்ட குழு கடந்த மார்ச் மாதம் விசாரணையை தொடங்கியது. இ‌ந்த வழ‌க்‌கி‌ல் அனைத்து குற்றச்சா‌ட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக கூறி, ராஜரத்தினத்தை குற்றவாளி என கடந்த மே மாதத்தில் நீதிபதிகள் அறிவித்தனர்.


19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரச தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்த நிலையில் ராஜரட்னத்தின் நோய்களைக் காரணம் காட்டி தண்டனையை குறைக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரினர். இதனையடுத்து அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 10 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. நவம்பர் 28 இல் சிறைக்குச் செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]