பிரித்தானியாவில் உச்சநீதிமன்றம் நடைமுறைக்கு வருகிறது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 1, 2009, லண்டன்:


ஐக்கிய இராச்சியத்தில் பெரும்பான்மையான வழக்குகளில் உச்ச மேன்முறையீட்டு நீதிமன்றமாக செயல்படும் ஹவுஸ் ஒஃப் லார்ட்ஸ் என்ற பிரபுக்கள் சபையின் நடைமுறை முடிவுக்கு வருகிறது.


நாட்டில் புதிதாக அமைக்கப்படுகின்ற உச்சநீதிமன்றத்துக்கான உறுப்பினர்கள் லண்டனில் இன்று பதவிப் பிரமானம் செய்துகொண்டுள்ளனர்.


கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகளாக பிரிட்டனின் உச்சநீதிமன்றமாக பரிணமித்துவந்த பிரபுக்கள் சபையின் நீதித்துறை செயற்பாடுகளும் அதிகாரங்களும் இனி முற்றுப் பெறும்.


ஐக்கிய இராச்சியத்தில் நீதிமன்ற நடைமுறைகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் நீதிமன்றம் இந்த புதிய உச்சநீதிமன்றமாகத்தான் இருக்கும்.


நீதித்துறையானது அரசாங்கத்தின் ஏனைய பிரிவுகளைச் சார்ந்தில்லாது சுயாதீனமாக விளங்க வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.


ஐக்கிய இராச்சியத்தில் சிவில் வழக்குகளைப் பொறுத்தவரை உச்சபட்ச மேன்முறையீட்டு நீதிமன்றமாக இனி இந்த புதிய உச்சநிதிமன்றம் திகழும். ஆனால் கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை ஸ்காட்லாந்தில் வேறொரு மேன்முறையீட்டு கட்டமைப்பு செயல்படும்.


பிரித்தானியாவில் பிரபுக்கள் சபை 1399ஆம் ஆண்டிலிருந்து ஏதோ ஒரு வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றமாக செயல்பட்டு வந்துள்ளது.

மூலம்