பெரும் பகுதி நீரினாலான புறக்கோள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 22, 2012

அடர்த்தியான நீராவியுடனான வளிமண்டலத்தைக் கொண்ட நீருலகம் ஒன்று இருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜிஜே 1241பி (GJ 1214b) என்ற இந்தப் புறக்கோள் நமது பூமியை விடப் பெரியதும் வியாழன் போன்ற வளிமக் கோளை விடச் சிறியதும் ஆகும்.


ஜிஜே 1214பி புறக்கோள் தனது சூரியனைச் சுற்றுவது ஓவியரின் பார்வையில்

இந்தப் புறக்கோளின் பெரும்பாலான பகுதியில் நீர் இருப்பது தற்போது ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கோளின் உயர்ந்த வெப்பநிலை காரணமாக இங்கு ஆச்சரியமான பொருட்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


"ஜிஜே 1214பி என்ற இக்கோள் எமக்குத் தெரிந்த வேறு எந்தக் கோளைப் போன்றும் காணப்படவில்லை," என ஆர்வார்டு சிமித்சோனியன் வானியற்பியல் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சக்கோரி பெர்ட்டா தெரிவித்தார்.


இப்புறக்கோள் 2009 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒப்பீட்டளவில் குளிர்மையான செங்குறளி விண்மீனை இரண்டு மில்லியன் கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவருகிறது. இதனால் இதன் வெப்பநிலை 200 செ. அளவிலும் கூடியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் விட்டத்தை விட 2.7 மடங்கு அதிகமானது. பூமியை விட அதிக நீரை இது கொண்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. "அதிக வெப்பநிலையும், அதிக அழுத்தமும் கொண்டிருப்பதால் இங்கு இங்கு 'சூடான பனிக்கட்டி' அல்லது 'மீப்பாய்ம நீர்' போன்ற பொருட்கள் இருக்கலாம் என ஆய்வாளர் பெர்ட்டா தெரிவித்துள்ளார்.


இந்த பத்தாண்டுகளின் இறுதியில் விண்வெளிக்கு அனுப்பப்படவிருக்கும் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி மூலம் இந்தக் கோள் பற்றிய மேலதிக ஆய்வுகளை நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


மூலம்[தொகு]