மலேசியாவின் 'மெக்கறி' உணவகம் பெயரை மாற்ற வேண்டியதில்லை எனத் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டம்பர் 9, 2009, மலேசியா:


மலேசியக் கறி உணவகம் "மெக்" (Mc) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என மலேசியாவின் மத்திய நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, மெக்டோனல்டு விரைவு உணவுக்கடை தனது 8 ஆண்டு கால சட்ட நடவடிக்கையில் தோல்வியடைந்தது.


மெக்கறி உணவகம் “மெக்” என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறி மெக்டோனல்டு நிறுவனம் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுத்தது. ஆனால் மெக்கறி உணவகம் அச்சொல்லைப் பயன் படுத்தலாம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாகத் தீர்ப்பளித்தது.


இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டிலும் மெக்டோனல்டு நிறுவனம் தோல்வியடைந்து விட்டது.


"மலேசிய கோழிக்கறி" என்பதைச் சுருக்கி "மெக்கறி" எனப் பெயரிடப்பட்ட அந்த உணவகத்தில் மீன்தலைக் கறி உள்ளிட்ட மலேசிய உணவு வகைகள் விற்கப்படுகின்றன.


எட்டாண்டு கால சட்ட நடவடிக்கை இறுதியில் முடிவுக்கு வந்துவிட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். இனி நாங்கள் முன்னதாகத் திட்டமிட்டபடி புதிய கிளைகளும் திறக்கலாம் என்று மெக்கறி உணவகத்தின் உரிமையாளர் பி.சுப்பையா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


மலேசியாவில் 185 கிளைகள் நடத்தும் மெக்டோனல்டு, முதலில் 2001ம் ஆண்டு மெக்கறி உணவகத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தது. உயர்நீதிமன்றம் 2006ம் ஆண்டு மெக்டோனல்டுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து மெக்கறி உணவகம் மேல்முறையீடு செய்திருந்தது.

மூலம்[தொகு]