மாஸ்கோ சுரங்கத் தொடருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 15, 2014

உருசியத் தலைநகர் மாஸ்கோவில் சுரங்கத் தொடருந்துப் பாதை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் படுகாயமடைந்தனர்.


மாஸ்கோவின் மேற்கே சிலவியான்ஸ்கி புலெவார்ட் மற்றும் மலஜியோச்னயா ஆகிய தொடருந்து நிலையங்களுக்கிடையே சுரங்கப் பாதையில் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. 200 பேர் வரை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த பலருக்கு அதே இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 106 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த 24 பேர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.


மின்னிணைப்பில் ஏற்பட்ட கோளாறே இவ்விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட சுரங்கப்பாதை 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


மூலம்[தொகு]