மெக்சிக்கோவில் எண்ணெய்க் குழாய் வெடித்ததில் 28 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 20, 2010

மெக்சிக்கோவின் மத்திய பகுதியில் எண்ணெய்க் குழாய் ஒன்று வெடித்ததில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டதுடன் ஐம்பதிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் 12 பேர் குழந்தைகள். நூற்றுக்கும் அதிகமான குடியிருப்பு மனைகள் சேதமடைந்ததாகவும், அவற்றில் 30 முற்றாக அழிந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மூன்று மைல் சுற்றுவட்டாரத்திற்கு சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பீமெக்ஸ் என்ற எண்ணெய் வழங்கி ஒன்றில் சிலர் சட்ட விரோதமாக எண்ணெய் திருட முயன்ற போதே வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிகிறது. எண்ணெய் வீதிகளில் பரவி தீப்பிடித்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் அவ்விடத்தில் இருந்து ஓடித் தப்பினர். சட்டவிரோதமாக எண்னெய் திருடுபவர்களினால் தமக்கு ஆண்டு தோறும் மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பீமெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இவ்வாண்டு மட்டும் 550 தடவைகள் எண்ணெய் திருட்டு பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுளதாக அந்நிறுவனம் கூறுகிறது.


இவ்விபத்துக் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்ட மெக்சிக்கோ அரசுத்தலைவர் பிலிப்பே கால்டெரன் இறந்தவர்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்தார். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என அவ்ர் தெரிவித்தார்.


மூலம்[தொகு]