யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களில் இலங்கையின் மலையகம் இணைப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 2, 2010


இலங்கையின் மலையகப் பகுதிகளான சிவனொளிபாதமலை, ஓட்டன் சமவெளி, நக்கிள்ஸ் மலைத்தொடர் ஆகியவற்றை பாதுகாக்கப்பட வேண்டிய உலக பாரம்பரியக் களங்களாக ஐநாவின் யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரித்துள்ளது.


சிவனொளிபாதமலை
ஜெய்ப்பூரில் உள்ள ஜந்தர் மந்தர்

பிரேசிலில் பிரசீலியா நகரில் சூலை 25 ஆம் திகதி முதல் ஆகத்து 3 ஆம் நாள் வரை பிரேசிலின் பிரசீலியா நகரில் நடைபெறும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக்குழுவின் 34 ஆவது மாநாட்டில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சிவனொளிபாதமலை உட்பட முக்கிய மலைகளை உள்ளடக்கியுள்ள இலங்கையின் மத்திய மலைநாட்டுப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.


வேகமாக அழிவடைந்த உயிரினமாக கருதப்பட்ட சிலென்டர் லோரிஸ் என்ற அரிய வகை தேவாங்கினம், ஊதா நிற முகத்தோற்றத்தைக் கொண்ட குரங்கினம், இலங்கைச் சிறுத்தைப்புலி மற்றும் அரிதான பறவையினங்கள், தாவர இனங்கள் போன்ற பல வகையான உயிரினங்களுக்கும் வாழ்விடமாக இவை விளங்குவதால் மத்திய மலைநாட்டுப் பகுதி, உயிரினப் பல்வகைத் தன்மைக்கு உகந்த இடமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் ஜெய்ப்பூரில் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இரண்டாம் ஜய்சிங் ஜய்ப்பூர் மகாராஜாவால் நிர்மாணிக்கப்பட்ட ஜந்தர் மந்தர் வானவியல் சாஸ்திர ஆய்வு மையத்தையும் உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ உள்ளடக்கியுள்ளது.


புளோரிடாவின் எவர்கிளேட்ஸ் தேசியப் பூங்கா, மடகாஸ்கரின் மழைக்காட்டுப் பகுதி ஆகியனவும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

மூலம்[தொகு]