வட அயர்லாந்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக உடன்பாடு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 6, 2010


ஐக்கிய இராச்சியத்தின் மாநிலமான வட அயர்லாந்தில் காவல்துறை மற்றும் நீதித்துறை தொடர்பான அதிகாரங்கள் லண்டனில் இருக்கும் பிரித்தானிய மத்திய அரசிடமிருந்து வட அயார்லாந்து தலைநகர் ஃபெல்பாஸ்ட்டில் இயங்கும் மாகாண அரசுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி மாற்றப்படும்.


ஐக்கிய இராச்சியத்தில் வட அயர்லாந்து

வட அயர்லாந்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான உடன்பாட்டை காப்பாற்றும் விதமாக ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தினை பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் பிரதமர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.


இந்த உடன்பாடு வட அயர்லாந்தின் இரு பிரதான அரசியல் கட்சிகளான சின் ஃபெயின் மற்றும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி ஆகியவற்றிடையே ஏற்பட்டுள்ளது.


அயர்லாந்து முழுமையாக ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பது சின் ஃபெயின் கட்சியின் நிலைப்பாடு, ஆனால் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியோ பிரிட்டனுடன் உறவை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்கிற கொள்கையை கொண்டுள்ளது.


இந்த அதிகார மாற்றத்தை ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி இதுவரை காலமும் எதிர்த்து வந்தது. ஷிண் ஃபெயின் கட்சியின் போராளிகள் அமைப்பான ஐஆர்ஏயின் முன்னாள் போராளித் தளபதிகள் சட்டம் ஒழுங்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள நேரிடும் என்று ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்து வந்தது.


இதற்கிடையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, "இது ஒரு முக்கிய படிக்கல்" என வர்ணித்துள்ளார்.

மூலம்