வன்னியில் போர்ப்பகுதியில் பணியாற்றிய தமிழ் மருத்துவர்கள் பிணையில் விடுதலை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 24, 2009, கொழும்பு:


தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட வன்னியில் பணியாற்றிய நான்கு மருத்துவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


சத்தியமூர்த்தி, வரதராஜா, ஷண்முகராஜா, இளம்செழியன் ஆகிய இம்மருத்துவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் காலகட்டத்தில் போர்ப்பிரதேசங்களில் பணியாற்றிவந்தனர். அங்கிருந்து தப்பிவந்த இவர்கள் பின்னர் அரச படைகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.


போர்ச் சேதங்கள் குறித்து மிகையான செய்திகளை வெளியிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் மீது புலன்விசாரணை நடத்தப்பட்டுவந்தது. இவர்கள் பிணையில் செல்ல கொழும்பு நீதிமன்றம் ஒன்று தற்போது அனுமதித்திருக்கிறது. இவர்கள் நால்வரையும் 10 லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் நிசாந்த கப்புஆராச்சி இன்று உத்தரவிட்டார்.


வவுனியாவில் மட்டும் தங்கியிருக்க வேண்டும், அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரகசியக் காவல்துறையினரிடம் சென்று கையெழுத்திட வேண்டும், என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்கள் நால்வருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.


வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பொதுமக்களின் இழப்புகள் குறித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தனர் என்பதே இவர்கள் மீது சுமத்தப்பட்டிந்த குற்றச்சாட்டாகும். எனினும் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலப்பகுதியில் இவர்கள் தாம் வன்னிப் பகுதியிருந்து கொடுத்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அழுத்தம் காரணமாகவே அவ்வாறு செய்திகளை வெளியிட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.


இருப்பினும் அந்த கருத்து அழுத்தம் காரணமாக அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கூறப்பட்டமையால் அதன் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

மூலம்[தொகு]