வெள்ளியில் எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 10, 2010


பூமிக்கு அருகில் இருக்கும் கோளான வெள்ளியில் (Venus) எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் இன்னும் காணப்படுவதாக ஐரோப்பாவின் வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற விண்கலத்தில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெள்ளி கோளில் 8-கிமீ-உயர மாட் மொன்ஸ் என்ற எரிமலை, மகெலன் விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்டது

ஒப்பிடும்போது மிகவும் புதிய எரிமலைக் குழம்புகள் வெள்ளியின் மேற்பரப்பில் இருந்து கிளம்பியமையை இவ்விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அகச்சிவப்புக் கதிர் கருவிகள் கண்டுப்டித்துள்ளன.


இக்குழம்புகள் அதனைச் சுற்றியுள்ள மேற்பரப்பில் உள்ள மூலப்பொருட் கலவையைவிட வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன.


இவை 2.5 மில்லியன் ஆண்டுகள் அல்லது அதற்குப் பின்னர் வெளிவந்தவையாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


”இப்பகுதிகள் தற்போதும் வெடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படலாம்”, என கலிபோர்னியாவைச் சேர்ந்த சூசான் சிமிரேக்கர் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.


ஏப்ரல் 8 சயன்ஸ் அறிவியல் இதழில் இத்தகவல்களை இக்குழு விபரமாக வெளியிட்டுள்ளது.


"இது ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும்," என வீனஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தின் திட்ட அறிவியலாளர் ஏக்கன் சுவெடம் தெரிவித்தார்.


வெள்ளிக் கோளின் குமுறக்கூடிய எரிமலைகள் குறித்து நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. வெள்ளியின் மேற்பரப்பில் சிறுகோள்கள் (Asteroid) அதிகளவில் மோதாமல் இருப்பதற்கான காரணங்கள் இந்தக்கண்டுபிடிப்பில் இருந்து வெளிப்படலாம் எனக் கருதப்படுகிறது.

மூலம்[தொகு]