2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. சிம்பாப்வே

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 11, 2011

2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் ஏ பிரிவில் நேற்று வியாழக்கிழமை கண்டி முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் பகல்-இரவு ஆட்டமாக இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையில் இடம்பெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியைச் சேர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திலகரத்ன டில்சான், உப்புல் தரங்க ஆகியோர் இணைந்து முதலாவது விக்கட்டுக்காக பெற்ற 282 ஓட்டங்கள் துடுப்பாட்ட உலகக்கிண்ண இணைப்பாட்ட வரலாற்றில் புதிய சாதனையாகும். முதலாவது விக்கட்டுக்கான இணைப்பாட்டமாக மாத்திரமன்றி துடுப்பாட்டக் கிண்ணப் போட்டிகளில் சகல விக்கட்டுக்களுக்குமான இணைப்பாட்டமாக இது கொள்ளப்படுகின்றது. இந்த சோடி மேலும் ஐந்து ஓட்டங்களை எடுத்திருந்தால் ஒரு நாள் போட்டிகளில் மிக அதிக ஓட்டங்களை எடுத்த சோடி என்ற சாதனையை இவர்கள் பெற்றிருக்க முடியும். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் உபுல் தரங்காவும் சனத் ஜெயசூரியாவும் முதல் விக்கெட்டுக்கு 286 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.


சிம்பாப்வே அணியின் தலைவர் சிக்கும்புரா நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். அதற்கிணங்க டில்சான்-தரங்க சோடி இருவரும் 45 ஓவர்கள் விளையாடி 282 ஓட்டங்களைப் பெற்றனர். உப்புல் தரங்க 141 பந்துகளை எதிர்கொண்டு 17 எல்லைகள் அடங்கலாக 133 ஓட்டங்கள் பெற்று மெளபுவின் பந்தில் அணித் தலைவர் சிக்கும்புராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து டில்சான் ஆட்டமிழந்தார். இவர் 131 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்சர் மற்றும் 16 எல்லைகள் உட்பட 144 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 327 ஓட்டங்களைப் பெற்றது. திசார பெரேரா 3 ஓட்டங்களுக்கும் மகேல 9 ஓட்டங்களுக்கும், மெத்திவ் ஓட்டம் எதுவும் பெறாமலும், சாமர சில்வா 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். அணித் தலைவர் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 11 ஓட்டங்களையும், சமரவீர ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்களையும் பெற்றனர். சிம்பாப்வேயின் மெளபு 7 ஓவர்கள் பந்து வீசி 62 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் பிரைஸ், உடசேயா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் பெற்றனர்.


இந்நிலையில் பதிலெடுத்தாடிய சிம்பாப்வே அணி 39 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று 139 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. சிம்பாப்வே அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக பிரண்டன் டைலர், சக்காபுவா ஆரம்ப ஜோடி 116 ஓட்டங்களைப் பெற்றது.


இதில் டைலர் 72 பந்துகளில் ஒரு சிக்சர், 9 எல்லைகள் அடங்கலாக 80 ஓட்டங்களைப் பெற்றார். மறுபுறத்தில் சக்காபுவா 61 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து வந்த ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர். பந்துவீச்சில் டில்சான் 4 விக்கெட்டுகளையும் முரளிதரன் 3 விக்கெட்டுக்களையும் மத்தியூஸ் 2 விக்கெட்டுக்களையும் பெரேரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். போட்டியில் 139 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டி குழு ஏ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டியில் ஆட்டநாயகனாக டில்சான் தெரிவானார்.

மூலம்[தொகு]