இரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 10, 2010

இரசியாவில் இன்று இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் போலந்தின் அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கி உட்படப் பல அரசு உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.


போலந்தின் அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கி

இவர்கள் பயணம் செய்த விமானம் இன்று காலை மாஸ்கோ நேரம் 1056 மணிக்கு கடும் பனிமூட்டத்தின் நடுவே சிமொலியென்ஸ்க் வான்படை விமான நிலையத்தில் தரையிரங்க முயற்சித்த போது மரங்களுடன் மோதி நொறுங்கியது என்றும் அதில் பயணம் செய்த எவரும் உயிர் தப்பவில்லை என்றும் இரசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


போலந்தின் அரசுத்தலைவர், அவரது மனைவி, இராணுவத் தளபதி, மத்திய வங்கி ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பல வரலாற்றியலாளர்கள் உட்பட 80 இற்கும் மேற்பட்டோர் இவ்விமானத்தில் பயணம் செய்திருந்தனர்.


சோவியத் படைகளினால் 1940 ஆம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான போலந்து போர்க்கைதிகள் படுகொலை செய்யப்பட்ட 70 வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இவர்கள் அங்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.


போலந்து மக்களுக்கு இந்த விபத்து ஒரு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாக போலந்தின் தலைநகர் வார்சாவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.


பிரதமர் டொனால்ட் டஸ்க் இச்செய்தியைக் கேள்விப்பட்டதும் அழுது விட்டார் என அவர் தெரிவிக்கிறார். திரு டஸ்க் உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார்.


அரசியலமைப்பின் படி உடனடியாக அரசுத்தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி, நாடாளுமன்றத்தின் சபாநாயகர் புரொனிசுலாவ் கமொரோவ்ஸ்கி பதில் அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.


விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது உடனடியாக அறியத்தரப்படவில்லை. 88 உயர் அதிகாரிகள் உட்பட ஏறத்தாழ 96 பேர் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


விமான் ஓட்டிகளின் தவறே இவ்விபத்துக்குக் காரணம் என இரசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 20 ஆண்டுகள் பழமையான இரசியத் தயாரிப்பான தூப்பொலிவ் 154 என்ற விமானமே விபத்துக்குள்ளானது.


"மின்ஸ்க் நகரிலேயே விமானத்தை தரையிறங்கக் கூறப்பட்டது. ஆனால் சிமொலியென்ஸ் என்ற இடத்தில் அது தரையிறங்கியது," என இரசிய அரசுப் பேச்சாளர் தெரிவித்தார்.


இரசியத் தலைவர்கள் உட்பட பல உலகத் தலைவர்கள் தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.


பிரதமரை விடக் குறைவான அதிகாரங்களைக் கொண்டிருந்த காச்சின்ஸ்கி வெளியுறவுத்துறை விவகாரங்களில் பல அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தார். போலந்தின் அரசியலில் சர்ச்சைக்குரியவராகவும் இருந்திருக்கிறார்.


வலதுசாரி கத்தோலிக்கப் பரப்புரைகளை மேற்கொண்டிருந்த அவர், தாராள-சந்தைப்படுத்தலை எதிர்த்து வந்தார்.

மூலம்[தொகு]