உள்ளடக்கத்துக்குச் செல்

நாசா தனது ஆளில்லா விண்கலங்கள் இரண்டை நிலவில் மோதவிட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, அக்டோபர் 9, 2009


நிலவின் நிலப்பரப்பில் எந்த அளவுக்கு நீரும், பனிக்கட்டியும் இருக்கின்றன என்பதைக் கண்டறியும் முயற்சியாக அதன் மேற்பரப்பில் இரண்டு ஆளில்லா விண்கலங்களை மோதவிட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூறுகிறது.


விண்கலம் மோதுவதால் ஏற்படும் புழுதியை அவதானித்து அதிலிருந்து தகவல்களைப் பெறும் எல்கிராஸ் (LCROSS) செயற்கைக்கோள் மூலம் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை நாசா திரட்டவுள்ளது.


எல்கிராஸ் களத்தில் இருக்கும் ஒளிப்பதிவுக் கருவிகள் மூலம் இந்த நிகழ்வு படம்பிடிக்கப்பட்டு அதேநேரத்தில் ஒளிபரப்பப்படும் என்று நாசா வாக்குறுதி அளித்திருந்தது ஆனால் அது சாத்தியப்பட்டிருக்கவில்லை.


எதிர்காலத்தில் மனிதனை அனுப்பி நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இது அவசியமான ஓர் ஆய்வு ஆகும் என்று நாசா தெரிவிக்கிறது.


`எல்கிராஸ்' என்ற 2,200 கிலோ எடை கொண்ட விண்கலம், இன்று மாலை இந்திய நேரப்படி 5 மணிக்கு நிலவின் தென்துருவம் அருகே உள்ள ஒரு பள்ளத்தில் மணிக்கு 9 ஆயிரம் கி.மீ. வேகத்தில் மோதியது. அப்போது 350 டன் எடையுள்ள துகள் படிமங்கள் தூக்கி வீசப்பட்டன. மோதிய இடத்தில் பெரும் பள்ளம் உருவானது. மோதல் நடந்த 4 நிமிடங்களுக்கு பிறகு, கேமரா உள்ளிட்ட சாதனங்களுடன் கூடிய மற்றொரு விண்கலம், சந்திரன் மீது மோதியது. 2-வது விண்கலம் நிலா மீது மோதுவதற்குமுன், முதல் விண்கலம் மோதியதால் ஏற்பட்ட விளைவுகளை பதிவு செய்து அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பியது. இந்த ராக்கெட் பதிவு செய்த விவரங்களை `நாசா' விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை அவர்கள் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. அதை உறுதிப்படுத்த இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று இந்த திட்டத்தின் தலைமை விஞ்ஞானி அந்தோணி கொலப்ரீடி தெரிவித்தார்.

மூலம்

[தொகு]