இந்திய அமெரிக்கர் சீனாவுக்கு இராணுவ தொழில்நுட்ப இரகசியங்களை வழங்கினார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 10, 2010

முன்னாள் அமெரிக்கப் பொறியியலாளர் ஒருவர் சீனாவுக்கு இராணுவ இரகசியங்களை வழங்கியதற்காக ஹவாயில் உள்ள நீதிமன்றம் ஒன்று அவரைக் குற்றவாளியாக அறிவித்துள்ளது.


பி2 வகை குண்டுவீச்சு விமானம்

இந்தியாவில் பிறந்த 67 வயதுடைய நொசீர் கவாடியா என்ற இந்தப் பொறியாளர் அமெரிக்க வான்படையில் பி-2 குண்டு வீச்சு விமானங்களின் உந்துகைத் தொகுதியை வடிவமைத்தவர்களில் ஒருவர் ஆவார். இவ்வகை விமானங்கள் ராடர்களை ஏமாற்றிப் பறக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. இவர் மீது சதி முயற்சி, மற்றும் சட்டவிரோதமாகப் பணமாற்றம் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. மொத்தம் 17 குற்றச்சாட்டுக்களில் 14 இல் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். நடுவர் குழு (jury) இவரைக் குற்றவாளியாக அறிவித்துள்ளமையால் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏவுகணை வடிவமைப்புக்கு உதவி புரியவென கவாடியா 2003 - 2001 காலப்பகுதியில் சீனாவுக்குச் சென்று வந்தாரென குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவருக்கு $110,000 (£69,000) பணம் இதற்காகக் கொடுக்கப்பட்டது. இப்பணத்தைக் கொண்டு அவர் ஹவாயின் மாவுய் தீவில் உள்ள தனது ஆடம்பர வீட்டுக்கான கடனை அடைத்தார் எனவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.


இந்தியாவில் பிறந்த கவாடியா 1960களில் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார். சில ஆண்டுகளில் அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். கருவி வடிவமைப்புத்துறையில் சர்வதேச புகழ்பெற்ற நார்த்தராப்க்ரமென் கார்ப்பரேசன் என்ற அமெரிக்க நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், 1986ல் அதில் இருந்து விலகினார். பிறகு பல்வேறு நிறுவனங்களுக்கும் வடிவமைப்பு ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். இவரது கண்டுபிடிப்புகளில் ராணுவக் கருவிகளும் உண்டு.


2005 நவம்பரில் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கான தண்டனை இவ்வாண்டு நவம்பரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்