கயானாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 30, 2011

கயானாவின் தலைநகர் ஜோர்ஜ்டவுன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் விமானம் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. இவ்விபத்தில் எவரும் கொல்லப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


நியூயோர்க் நகரில் இருந்து 150 பயணிகளுடன் புறப்பட்ட கரிபியன் ஏர்லைன்சு போயிங் 737-800 விமானமே விபத்துக்குள்ளானது. காலநிலை சீரற்றதாக இருந்தமையே இவ்விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. செடி ஜகான் பன்னாட்டு விமான நிலையத்தில் இவ்விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கயானாவின் அரசுத்தலைவர் பரத் ஜாக்டியோ தெரிவித்தார்.


"பலர் சிறு காயங்களுடன் தப்பி விட்டமைக்கு நாம் நன்றியுடையவர்கள்," என ஜாக்டியோ தெரிவித்தார்.


இரவு நேரமானதால் இடிபாடுகளிடையே இருந்து பயணிகளைக் காப்பதற்கு மீட்புப் பணியாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.


அவசர உதவி வருவதற்கு முன்னர் வாடகைக் கார் ஒன்று வந்து தன்னை விமான நிலையத்துக்குக் கொண்டு சென்றதாகவும் அதற்கு அந்த சாரதி தம்மிடம் இருந்து பணம் பெற்றதாகவும் ஒரு பயணி தெரிவித்தார். ஒருவர் மட்டும் கால்கள் உடைந்த நிலையில் மீட்கப்பட்ட்தாகவும், ஏனையோர் சிறு காயங்களுக்கு மட்டுமே உள்ளனதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் லெஸ்லி ராம்சாமி தெரிவித்தார்.


மூலம்[தொகு]