உள்ளடக்கத்துக்குச் செல்

கைதானதாக அறிவிக்கப்பட்ட கடாபியின் மகன் மீண்டும் ஆதரவாளர்களின் மத்தியில் தோன்றினார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 23, 2011

லிபியத் தலைவர் முஆம்மர் கடாபியின் மகன் ஆயிஃப் அல்-இசுலாம் தலைநகர் திரிப்பொலியில் தனது ஆதரவாளர்களின் மத்தியில் தோன்றி "கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை" தமது படைகள் முறியடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.


கடாஃபியின் மூன்று மகன்களையும் தாம் கைது செய்துள்ளதாக திரிப்பொலியை முற்றுகை இட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் நேற்றுத் தெரிவித்திருந்தனர். ஆனாலும், கடாபியின் மகன் ஆயிஃப் (அகவை 39) இன்று அதிகாலையில் அவரது ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்கள் தங்கியிருக்கும் விடுதி ஒன்றில் செய்தியாளர்களின் மத்தியில் திடீரெனத் தோன்றினார். சாயிஃப் அல்-இசுலாம் மிகவும் உறுதியுடன் காணப்பட்டதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


இதற்கிடையில் கடாஃபியின் மாளிகையான பாப் அல்-அசீசியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் குண்டுவெடிப்புகளும் துப்பாக்கிச் சூடுகளும் இன்று இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடாபி எங்கே உள்ளார் என்பது இதுவரையில் அறியப்படாதுள்ளது. தலைநகரின் பெரும்பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக இரண்டு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.


இதற்கிடையில் பெங்காசியில் உள்ள கிளர்ச்சியாளர்களின் தேசிய இடைக்காலச் சபை (National Transitional Council, NTC) புதன்கிழமை அன்று தலைநகர் திரிப்பொலிக்கு சென்று புதிய அரசாங்கம் ஒன்றை ஆரம்பிக்கும் பணிகளைத் தொடங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.


நேற்றுக் கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட கடாஃபியின் மூத்த மகன் முகம்மது கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.


கடாஃபியின் படைகள் கிளர்ச்சியாளர்களுடனான தமது சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனாவும் உருசியாவும் கெட்டுக்கொண்டுள்ளன. அதே வேளையில், பிராந்தியத் தலைவர்கள் இவ்வார இறுதியில் நியூயோர்க் நகரில் கூடி லிபியப் பிரச்சினை குறித்து ஆராயவுள்ளதாக ஐநா செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.


கடாஃபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் கடந்த பெப்ரவரி மாதத்தில் ஆரம்பமாயின. நாட்டின் கிழக்குப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்த கிளர்ச்சியாளர்கள் சென்ற ஞாயிறன்று தலைநகர் திரிப்பொலியினுள் நுழைந்தனர்.


மூலம்

[தொகு]