மூன்று நாடுகளில் உலகின் மிகப் பெரும் வானொலித் தொலைநோக்கி அமையவிருக்கிறது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 26, 2012

உலகின் மிகப் பெரும் வானொலித் தொலைநோக்கி, தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அமைக்கப்படவிருக்கிறது.


ஓவியரின் பார்வையில் SKA அணியின் அன்டெனாக்கள்

நேற்று வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற "சதுர கிலோமீட்டர் அணி" (Square Kilometre Array - SKA) என்ற அமைப்பின் கூட்டத்தில் அவ்வமைப்பில் அங்கம் பெறும் நாடுகள் இந்த முடிவை எடுத்தன.


1.5 பில். யூரோ செலவில் அமையவிருக்கும் இந்தப் பிரம்மாண்டமான வானலை வாங்கிகள் (ஆண்டெனாக்கள்) மூலம் வானியலில் இதுவரையில் பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபஞ்சம் பற்றிய அடிப்படையான பல கேள்விகளுக்கும், ஐன்ஸ்டைனின் ஈர்ப்புக் கொள்கை உட்பட வேற்றுக் கோள்களில் உயிரினங்களுக்கான சாத்தியப்பாடு தொடர்பிலும் இந்த தொலைநோக்கியால் பதில் கிடைக்கும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.


ஒரு மில்லியன் சதுர மீட்டர்கள் (கிட்டத்தட்ட 200 உதைப்பந்தாட்ட மைதானங்களில் அளவில்) மொத்தப்பரப்பளவில் இந்த வானலை வாங்கிகள் உருவாக்கப்படவுள்ளன. இதற்காக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களில் பரந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான சிறிய வானலைவாங்கிகளிடம் இருந்து பெறப்படும் சமிக்கைகளை இது பெறும்.


தென்னாப்பிரிக்காவில் இந்தத் தொலைநோக்கி அமைக்கப்படுவதன் மூலம் அங்கு ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்புப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் கரூ என அழைக்கப்படும் பெரும் பாலைவனப் பகுதியில் 3,000 தொலைநோக்கிகள் நிறுவப்படவுள்ளன.


ஆத்திரேலியாவில் மேற்கு ஆத்திரேலிய மாநிலத்தில் பேர்த் நகரில் இருந்து 500 கிமீ வடக்கே பூலார்டி நிலையத்தில் இந்தத் தொலைநோக்கிகள் நிறுவப்படவுள்ளன. ஆத்திரலேசியாவில் தாழ்வதிர்வெண் வானலைவாங்கிகளும், தென்னாப்பிரிக்காவில் இடைநிலை அதிர்வெண் வாங்கிகளும் நிறுவப்படும்.


எஸ்கேஏ என அழைக்கப்படும் "சதுர கிலோமீட்டர் அணி" அணியில் ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, இத்தாலி, சீனா, கனடா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியன உறுப்பு நாடுகளாகவுள்ளன. இந்தியா இவ்வணியில் துணை உறுப்பு நாடாக அங்கம் வகிக்கின்றது.


இத்திட்டத்தின் முதலாவது கட்டம் 2015/16 ஆம் ஆண்டில் 360மில் யூரோக்கள் செலவில் நிறைவேற்றப்படும். இதற்கான பணிகள் 2013 இல் ஆரம்பமாகும்.


மூலம்[தொகு]