எகிப்தில் கால்பந்து ரசிகர்களிடையே மோதல், 74 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 2, 2012

எகிப்தின் போர்ட் செட் நகரில் கால்பந்தாட்ட எதிரணி ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டதில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு அணிகளுக்கிடையே இடம்பெற்ற ஆட்டத்தின் முடிவில் இரு அணி ரசிகர்களிடையே இந்த மோதல் இடம்பெற்றது. நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


இம்மோதலை அடுத்து எகிப்தின் அமைச்சரவையும், நாடாளுமன்றமும் உடனடியாகக் கூட்டப்பட்டன. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு காவல்துறையினர் எவ்வித நடவடிக்கை எடுக்காததை ஒட்டி இன்று வியாழக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


போர்ட் செட் நகருக்கு கலவரத்தை அடக்குவதற்காக இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பாதுகாப்பு ஊழியர்கள் சிலரும் அடங்குவர். கால்பந்தாட்ட ஆட்டத்தைச் பார்க்கச் சென்ற சிலர் கத்திகளையும் தம்முடன் எடுத்துச் சென்றதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


நேற்றைய ஆட்டத்தில் போர்ட் செட் அணியான அல்-மாஸ்ரி 3-1 என்ற கணக்கில் அல்-ஆஹ்லி அணியை வென்றது. இதனை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. அல்-ஆஹ்லி அணி ஆதரவாளர்கள் மைதானத்தில் இறங்கி ஆட்டக்காரர்களையும் ஆதரவாளர்களையும் தாக்கத் தொடங்கினர். அங்கு மிகக் குறைந்தளவு காவல் துறையினரே பணியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.மைதானத்தின் ஒரு பகுதி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அல்-அஹ்லி அணியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேறொரு கால்பந்து ஆட்டம் ஒன்று போர்ட் செட் கலவரத்தை அடுத்து இடையில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தின் ஒரு பகுதியைத் தீ வைத்துக் கொளுத்தினர். ஆனாலும், ஆட்சேதம் ஏதும் ஏற்படவில்லை.


மூலம்[தொகு]