ஆஸ்திரேலியப் பழங்குடிப் போர்வீரரின் உடல் 170 ஆண்டுகளுக்குப் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 11, 2010


மேற்கு ஆஸ்திரேலியாவில் 1833 இல் பிரித்தானியக் குடியேற்றத்தை எதிர்த்துப் போரிட்டு மாண்ட ஆஸ்திரேலியப் பழங்குடி போர்வீரர் ஒருவரின் தலை பேர்த் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.


நூன்கார் பழங்குடிப் போர்வீரர் யாகன்

யாகன் என்ற இந்த பழங்குடி வீரர் பிரித்தானிய ஆதிக்கவாதி ஒருவரால் 1833 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அவரது தலை துண்டிக்கப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அது பின்னர் அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அது பின்னர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் 1964 ஆம் ஆண்டில் அடக்கம் செய்யப்பட்டது.


நூன்கார் எனப்படும் இந்தப் பழங்குடிகளின் இப்போதைய தலைவர்கள் யாகனின் தலையை இங்கிலாந்தில் இருந்து தருவிப்பதற்குப் பல தசாப்தங்களாக முயற்சித்து 1997 ஆம் ஆண்டில் வெற்றியடைந்தனர். யாகனின் தலை கிளறி எடுக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டுவரப்படட்து. இப்போது அது பேர்த்தில் உள்ள நினைவுப் பூங்கா ஒன்றில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


யாகனின் உடலின் ஏனைய பகுதிகள் அந்தப் பூங்காவின் ஓரிடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.


யாகன் இப்போது பெரும் மதிப்போடு அடக்கம் செய்யப்பட்டதில் நாம் அனைவரும் பெருமை அடைகிறோம்.

—நூன்கார் பழங்குடிகளின் பேச்சாளர்

"(அவர்) தனது மக்களின் தலைவர், தனது நம்பிக்கைகளுக்காகப் போரிட்டவர். தான் சரியென நம்பிய ஒரு போராட்டத்தில் தனது உயிரைத் தியாகக் செய்தார்," என மேற்கு ஆஸ்திரேலிய பழங்குடியினர் அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


ஆதிக்கவாதிகளுடனான நூன்கார் பழங்குடிகளின் போரில் பல குடியேறிகள் யாகனால் கொல்லப்பட்டனர்.


"யாகன் இப்போது பெரும் மதிப்போடு அடக்கம் செய்யப்பட்டதில் நாம் அனைவரும் பெருமை அடைகிறோம்," என யாகனின் தலையை எடுத்து வருவதற்காக இங்கிலாந்து சென்ற நூன்கார் பழங்குடிகளின் பேச்சாளர் ரிச்சார்ட் வில்க்ஸ் தெரிவித்தார்.

மூலம்[தொகு]