கலிபோர்னியாவில் இருந்து மர்ம ஏவுகணை செலுத்தப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 10, 2010

கடந்த திங்கட்கிழமையன்று கலிபோர்னியாவின் தெற்குக் கரையோரப் பகுதியில் இருந்து வானில் ஏவப்பட்டதாகக் கருதப்படும் மர்மமான ஏவுகணை பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என பெண்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கரையில் இருந்து 56 கிமீ தூரத்தில் ஏவுகணை ஒன்றில் இருந்து விடுபட்ட நீராவிப் புகையின் நிரலை சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் உலங்குவானூர்தி ஒன்று படம் பிடித்து வெளியிட்டிருந்தது.


"இந்த ஏவுகணையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதை நாம் உறுதியாகக் கூற முடியும்," என பெண்டகனின் பேச்சாளர் டேவிட் லப்பான் கூறினார். இந்த ஏவுகணையால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பெண்டகன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


பொதுவாக அமெரிக்காவில் ஏவுகணை ஒன்று செலுத்தப்படுவதற்கு பலர் அதிகாரம் அளிக்க வேண்டும். அப்படியான எதுவும் வழங்கப்படவில்லை என பெண்டகன் தெரிவித்துள்ளது.


இது குறித்து பல கோணங்களில் ஆராயப்பட்டு வருவதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.


மூலம்[தொகு]