ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் உயிருடன் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 9, 2010


ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரின் வடமேற்கில் இந்தியர் ஒருவர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிருடன் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுக் கடுமையான எரிகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


எசெண்டன் என்ற புறநகர்ப் பகுதியில் 29-வயது இந்தியர் உடம்பில் 15% தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.


இரவு விருந்து ஒன்றுக்குச் சென்றுவிட்டு இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மனைவியை வீட்டில் இறக்கி விட்டு தானது வாகனத்தை நிறுத்துவதற்காகச் சென்ற வேளையிலேயே இத்தாக்குதல் நடந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கும் போது நான்கு இனந்தெரியாதோர் அவரைத் தாக்கி அவர் மீது திரவப் பொருள் ஒன்றை வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் கும்பலில் ஒருவர் அவரின் மீது தீக்குச்சியைப் பற்றை எறிந்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


அவரது கைகள், முகம் மற்றும் மார்புப்பகுதியில் பலத்த எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன.


சென்ற வாரம் இந்திய மாணவர் ஒருவர் மெல்பேர்ணில் இனந்தெரியாதோரினால் தாகுதலுக்குள்ளாகி இறந்த நிகழ்வை அடுத்து இத்தாக்குதல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு இந்திய அரசு சென்ற வாரம் எச்சரித்திருந்தது.


நேற்றிரவுத் தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்