ஆப்கானித்தானில் ஐந்து ஆத்திரேலியப் படையினர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 30, 2012

ஆப்கானித்தானில் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் ஐந்து ஆத்திரேலியப் படையினர் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


இன்று வியாழக்கிழமை ஹெல்மாண்டு மாகாணத்தில் உலங்கு வானூர்தி விபத்து ஒன்றில் இரண்டு ஆத்திரேலியர்கள் கொல்லப்பட்டனர். நேற்று புதன்கிழமை உருஸ்கான் மாகாணத்தில் ஆப்கானிய இராணுவ உடையில் வந்த ஒரு நபர் மூன்று ஆத்திரேலியப் படையினரைச் சுட்டுக் கொன்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் காயமடைந்தனர்.


"பல உயிர்களைக் காவு கொண்ட ஒரு போரில் ஒரே நாளில் இவ்வளவு படையினரை நாம் எப்போதும் இழந்ததில்லை" என ஆத்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


குக் தீவுகளில் பசிபிக் நாடுகளின் கூட்டத் தொடர் ஒன்றில் பங்குபற்றவெனச் சென்றிருந்த ஜூலியா கிலார்டு தனது பயணத்தை இடைநிறுத்திவிட்டு உடனடியாக நாடு திரும்பினார்.


2002 ஆம் ஆண்டு முதல் ஆப்கானித்தானில் 33 ஆத்திரேலியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். உருஸ்கான் மாகாணத்தில் கிட்டத்தட்ட 1,500 ஆத்திரேலியப் படையினர் நிலை கொண்டுள்ளனர். ஆப்கானியப் படையினருக்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


மூலம்[தொகு]