கிழக்கு உட்பட இலங்கையின் மூன்று மாகாணசபைகளுக்கு இன்று தேர்தல்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 8, 2012

இலங்கையின் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை நடந்து முடிந்ததாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இன்று மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்தது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதற்கு 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் தகுதி பெற்றிருந்தனர். 3 மாகாணசபைகளுக்குமான தேர்தல்களில் சுமார் 50 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாறை, மட்டக்களப்பில் 52.55 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இன்றைய தேர்தலில் வாக்காளர்களின் ஆர்வம் குறைவாகக் காணப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.


மூன்று மாகாணங்களிலும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை கணியவெலி சிங்கள மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் சிறீலங்கா முசுலிம் காங்கிரசு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுக்கிடையிலேயே குண்டாந்தடித் தாக்குதல் இடம்பெற்றதாகவும், சட்டவிரோதமான முறையில் வாக்களிக்க முயன்ற சிலரைக் கிண்ணியா காவல்துறையினர் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூன்று மாகாண சபைகளுக்கும் 108 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் 3073 பேர் போட்டியிட்டனர். முதலாவது தேர்தல் முடிவு இன்றிரவு 10 மணியளவில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகத் தேர்தல்கள் திணைக்களம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.


மூலம்[தொகு]