பாம்பன் பாலத்தின் மீது இந்தியக் கடற்படைக் கப்பல் மோதியது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 14, 2013

இராமேசுவரத்தில் பாம்பன் பாலம் மீது இந்தியக் கடற்படைக்கப்பல் ஒன்று மோதியதில், பாலத்தின் தூண் சேதமாகியது. இதனையடுத்து தொடருந்துச் சேவைகள் பாதிப்புக்குள்ளாயின.


பாம்பன் பாலம்

இந்தியக் கடற்படைக் கப்பல் மும்பை செல்லும் வழியில் இராமேசுவரத்தில் தரிந்து நின்றது. கடந்த புதன்கிழமை பாம்பன் பாலம் அருகே அது தரை தட்டியிருந்தது. அதனை மீட்கும் பணி ஆரம்பமாகியிருந்தது. ஆனாலும் கப்பலின் நங்கூரத்தின் பிடி தளர்ந்ததால், கப்பல் நகர்ந்து பாலத்தின் மீது மோதியது.


இதனையடுத்து இராமேசுவரம் நோக்கிய அனைத்து தொடருந்து சேவைகளும் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


கடலில் மணல், கல்லுடன் கூடிய பவளப் பாறைகள் மீது 40 அடி இடைவெளியில் 145 தூண்களுடன் 2.3 கிமீ தொலைவுக்கு தொடருந்துப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தின் கீழ் பகுதியில் கப்பல்கள் செல்ல வசதியாக, இப்பாலம் திறந்து, மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செருமனியைச் சேர்ந்த ஸ்கெர்ஜர் என்ற பொறியாளரால் கட்டி முடிக்கப்பட்டு 1914-ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. 1964 இல் இடம்பெற்ற தனுஷ்கோடி புயலில் பாலம் சிறிது சேதமடைந்தது. பின்னர் அது செப்பனிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இத்தொடருந்துப் பாதையை அகலப் பாதையாக மாற்றுவதற்காக தொடருந்துப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது. ரூ. 23 கோடி மதிப்பில் பாம்பன் பாலம் அகலத் தொடருந்துப் பாதையாக மாற்றப்பட்டு 2007 முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது.



மூலம்[தொகு]