எக்குவடோர் அரசுத்தலைவராக ரஃபாயெல் கொரெயா மூன்றாவது தடவையாகப் பதவியேற்றார்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 26, 2013

எக்குவடோர் நாட்டின் அரசுத்தலைவராக மூன்றாவது முறையாக ரஃபாயெல் கொரெயா வெள்ளியன்று தலைநகர் கியூடோவில் உள்ள நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டார்.


ரபயெல் கொரெயா (2013)

இலத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான எக்குவடோரில் 50 வயதான ரஃபாயெல் பேல் கொரெயா இடதுசாரித் தலைவரும் வெனிசுவேலாவின் முன்னாள் தலைவர் ஊகோ சாவேசுவின் நெருங்கிய சகாவும் ஆவார். நாட்டில் மிகவும் செல்வாக்குள்ளவரான கொரெயாவின் சோசலிச இயக்கத்திற்கான கூட்டணிக் கட்சி நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில், மூன்றாவது முறையாக அந்நாட்டு சனாதிபதியாக சோசலிச இயக்கத்திற்கான கூட்டணி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் முடிவு கடந்த பிப்ரவரி 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 137 இடங்களில் 100 இடங்களை கொரெயா தலைமையிலான சோசலிச இயக்கத்திற்கான கூட்டணி கைப்பற்றியது. இதன் மூலம் ரஃபயெல் கொரெயா மூன்றாவது முறையாக எக்குவடோரின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


வெள்ளியன்று எக்குவடோர் தலைநகர் கியூடோவில் உள்ள நாடாளுமன்றத்தில் சனாதிபதி பதவியேற்பு விழா நடைபெற்றது. சனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட பின்னர் ரஃபயெல் கொரெயா கூறியதாவது: "தற்போது எக்குவடோர் குடிமக்களின் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஏழைகளின் புரட்சி ஆகும். இந்த புரட்சி வெறும் ஆரம்பம் தான்," என்றார்.


சுதந்திர விளக்கை ஏந்தி முன்னோக்கி செல்ல வேண்டிய பொறுப்பு நம் கையில் இருக்கிறது. நாட்டில் நிலவும் வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக இரண்டாவது விடுதலைப் போரை நடத்திட வேண்டும். இதன் மூலம் ஆழமான அரசியல், மற்றும் சமூகப் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும். 2007ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு மில்லியன் மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு நல்வாழ்வு அளித்திருக்கிறோம். நம் நாட்டில் இருக்கும் இயற்கை வளம், மனித திறமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிறந்த கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டு வறுமையை தோற்கடிக்க வேண்டும் என்பதே நமது முக்கிய இலக்காகும். இலத்தின் அமெரிக்காவில் வறுமையை குறைத்து வரும் நாடுகளில் எக்குவடோர் ஒன்றாக இருக்கிறது என இலத்தின் அமெரிக்க மற்றும் கரீபியன் பொருளாதார ஆணையம் கூறுகிறது. அமெரிக்காவில் ஏராளமானோர் வறுமையின் பிடியில் இருந்து வருகின்றனர். இந்தப் பூமியில் இருந்தே வறுமை அகற்ற வேண்டியது நமது தார்மீக கடமையாகும். மனித வரலாற்றில் வறுமை இந்த பூலோகத்தில் உள்ள வளங்களின் பற்றாக்குறையால் வருவதல்ல. மாறாக தவறான கொள்கைகள் மற்றும் இந்த விபரிதமான கட்டமைப்புகள்தான் காரணம் ஆகும். வறுமை மற்றும் முறை கேடான சமத்துவமின்மையைத் தோற்கடித்து உண்மையான சனநாயகத்தை அடைய, சனநாயக அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட மனித திறமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு மக்களிடம் ஆழமான அரசியல் அறிவை மேம்படுத்த வேண்டும். அரசியல் படுத்த வேண்டும்.


எக்குவடாரின் அரசியல் மற்றும் பொருளாதாரத் திரத்தன்மையை உறுதிப்படுத்த மக்களின் இந்த புரட்சி பயணம் தொடர வேண்டும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோர்ந்து விடக்கூடாது. தோல்வியடைந்து விடக் கூடாது. நமது அரசியல் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். நாம் எப்போதையும் விட இனி மிகவும் திறமையாக செயலாற்றிட வேண்டும். நாம் எதையும் இழக்க நேரமில்லை. மக்களின் கோரிக்கைகளை கவனமாக கேட்க வேண்டும். நமது இலக்கை விரைவாக அடைய முடியும் என்றால், அந்த தருணத்தில் அதற்காக உயிரை விடவும் தயங்கக் கூடாது. நமது நாட்டின் பிராந்திய வளர்ச்சி விகிதம் கடந்தாண்டு 3.5 சதவிகிதமாக இருந்ததை, இவ்வாண்டு 4.3 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறோம். வேலையின்மை 4.1 சதவிகிதமாக இருக்கிறது. இது இந்தப் பிராந்தியத்தில் குறைவு என்றாலும், வேலையின்மையே இல்லாத நிலையை உருவாக்கிட வேண்டும் என்று கூறினார்.


இந்த பதவியேற்பு நிகழ்வில் வெனிசுவேலா அரசுத்தலைவர் நிக்கோலஸ் மதுரோ, பெருவின் தலைவர் ஓலண்டா உமலா, கோஸ்தா ரிக்கா அரசுத்தலைவர் சின்சில்லா, இந்துராசின் சனாதிபதி போர்பிரியோ லோபோ, கொலம்பியா அரசுத்தலைவர் உவான் சாண்டோஸ், மற்றும் சிலி சனாதிபதி செபஸ்தியான் பினிரா ஆகியோர் உட்பட 90 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


2006 ஆம் ஆண்டில் கொரெயா முதற்தடவையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து நாட்டில் பல ஆண்டு காலமாக நிலவிவந்த திரமற்ற அரசியல் நிலைமை சீரடைந்தது. "மக்கள் புரட்சி" என அழைக்கப்பட்ட அவரது இடதுசாரி அரசியல் கொள்கை அவரை சாதாரண மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றது மட்டுமல்லாமல் அயல் நாடுகளில் இடதுசாரித் தலைவர்களை நண்பர்களாக்கியது.


2007 ஆம் ஆண்டில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தினார். இதன் மூலம் அவர் 2009 ஆம் ஆண்டில் மீண்டும் அரசுத்தலைவராகப் போட்டியிட வழி வகுத்தது.


மூலம்[தொகு]