8.5 மணி நேரத்தில் தனது சூரியனைச் சுற்றி வரும் புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 21, 2013

தனது சூரியனை 8.5 மணித்தியாலங்களில் சுற்றிவரும் புதிய புறக்கோள் ஒன்றை அமெரிக்க வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


கெப்லர் 78பி (Kepler 78b) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்புறக்கோளை மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழக வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரியனுக்கும் புதனுக்கும் இடையேயான தூரத்தை விட 40 மடங்கு கிட்டவாக இப்புதிய புறக்கோளுக்கும் அதன் சூரியனுக்கும் இடையேயான தூரமாகும். இதனால் இதன் மேற்பரப்பு வெப்பநிலை 5000 கெல்வின் ஆகும். பூமியின் அளவை ஒத்ததாக உள்ள கெப்லர் 78பி உருகிய பாறைகளைக் கொண்ட பெருங்கடலினால் சூழப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.


இப்புறக்கோளில் இருந்து வரும் ஒளியை கெப்லர் வானியல் தொலைக்காட்டி மூலம் வானியலாளர்கள் அவதானித்துள்ளனர். இந்த ஒளி புறக்கோளின் மேற்பரப்பில் இருந்து வெளியேறியதாக இருக்கலாம், அல்லது அதன் மீது பட்டுத் தெறித்து வந்த கதிர்களாகவும் இருக்கலாம் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


2009 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட கெப்லர் விண்கலத்தின் இரண்டு சில்லுகள் தற்போது பழுதடைந்துள்ளதாக நாசா இவ்வாரம் அறிவித்திருந்தது. இதனால் இத்தொலைக்காட்டி புதிய புறக்கோள்களைக் கண்டுபிடிக்க முடியாதிருக்கும் என நாசா கூறியுள்ளது. இதனைத் திருத்துவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்விண்கலம் சேகரித்த ஒளிக்கீற்றுகளை வானியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.


மூலம்[தொகு]