உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 6, 2014

வங்காளதேசத்தில் வன்முறைகளுக்கு மத்தியில் நேற்று இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டுள்ளது.


முக்கிய எதிர்க்கட்சிகள் இத்தேர்தலைப் புறக்கணித்திருந்தன. 300 நாடாளுமன்றத் தொகுதிகலில் அரைவாசிக்கும் அதிகமானவற்றில் ஆளும் கட்சியினர் போட்டியின்றித் தெரிவாயினர். 20% ற்கும் சற்று அதிகமானவர்களே வாக்களித்திருந்தனர். 2008 ஆம் ஆண்டுத் தேர்தலில் 70% இற்கும் அதிகமானோர் வாக்களித்திருந்தனர்.


தேர்தல் இடம்பெற்ற 147 தொகுதிகளில் 105 இல் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றது. ஏனையவற்றை ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும், சுயேட்சையாளர்களும் வென்றனர். 127 இடங்களில் அவாமி லீக் கட்சியினர் போட்டியின்றித் தெரிவாயினர். எட்டுத் தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.


நேற்றைய தேர்தல் நாளில் மட்டும் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்.


வங்காளதேச தேசியக் கட்சி கடந்த சனிக்கிழமை முதல் நாடு தழுவிய வேலைநிறுத்ததுக்கு அழைப்பு விடுத்திருந்தது. தமது ஆதரவாளர்களைத் தேர்தலை முழுமையாகப் புறக்கணிக்குமாறு அக்கட்சியின் தலைவி காலிதா சியா முன்னதாகக் கேட்டிருந்தார். தேர்தல் முடிவுகளை செல்லாமல் ஆக்கக் கோரிக்கை விடுத்த அவர் இன்று திங்கட்கிழமை முதல் 48 மணி நேர வேலைநிறுத்ததிற்கு அறைகூவல் விடுத்தார்.


வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல்கள் நடக்கும் போது ஆட்சியில் இருக்கும் அரசு பதவி விலகி, பக்கச் சார்பற்ற ஒரு இடைக்கால அரசு ஒன்றின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படுவது சட்டபூர்வமான வழக்கமாகும். ஆனால் இவ்வழக்கத்தை கடந்த 2010 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத் திருத்தம் மூலம் அவாமி லீக் அரசு மாற்றியதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.


மூலம்

[தொகு]