உள்ளடக்கத்துக்குச் செல்

சோமாலிய அல்-சபாப் போராளிகள் எத்தியோப்பியப் படையினர் மீது தாக்குதல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 11, 2012

அல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதக் குழுவினர் சோமாலியாவில் நிலைகொண்டுள்ள எத்தியோப்பிய அமைதி காகும் படையினரின் முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதில் பல படையினர் கொல்லப்பட்டனர்.


சோமாலியாவின் மத்திய பகுதியில் கெடோ பிரதேசத்தில் யூர்க்குட் கிராமம் அருகே உள்ள முகாம் மீது இரு முனைத் தாக்குதல் நடத்தப்பட்டது. 73 படையினர் கொல்லப்பட்டதாக அல்-சபாப் போராளிகள் அறிவித்துள்ளனர். பதிலுக்கு 48 போராளிகள் கொல்லப்பட்டனர் என சோமாலிய அரசு அறிவித்துள்ளது. எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற சரியான விபரம் அறியப்படவில்லை. 3 மணி நேரம் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த நவம்பர் மாதத்தில் எத்தியோப்பியப் படையினர் சோமாலியாவில் நுழைந்ததன் பின்னர் அவர்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவெனக் கூறப்படுகிறது.


ஏப்ரல் மாத இறுதியில் பைடோவா, மற்றும் பெலெடுவைன் பகுதிகளில் இருந்து எத்தியோப்பியப் படையினர் விலக்கிக்கொள்ளப்படுவர் என ஆப்பிரிக்க ஒன்றியம் முன்னதாக அறிவித்திருந்தது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி காக்கும் படையினரின் எண்ணிக்கையை 17,000 ஆக அதிகரிப்பதற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை அண்மையில் வாக்களித்திருந்தது.


ஆப்பிரிக்க ஒன்றிய அமைதி காக்கும் படைகளில் கென்யாவும் அடுத்த வாரம் இணைந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]