வியாழனில் இடம்பெற்ற மோதுகையை அடுத்து பெரும் தீப்பந்து அவதானிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 6, 2010


விண்கல் அல்லது சிறுகோள் ஒன்று வியாழனில் சென்ற வியாழக்கிழமை மோதியதை அடுத்து அப்பகுதியில் பெரும் தீப்பந்து ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜூலை மாதத்தில் இதே போன்றதொரு மோதுகை வியாழன் கோளில் இடம்பெற்றது

இந்தத் தீப்பந்து ஜூன் 3 2031 UTC மணிக்கு பிலிப்பீன்சைச் சேர்ந்த கிறித்தோபர் கோ, மற்றும் ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஆந்தனி உவெசுலி ஆகிய இரண்டு தனிப்பட்ட வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. உவெஸ்லி என்பவரே சென்ற ஜூலை மாதத்தில் வியாழன் கோளில் இடம்பெற்ற மோதுகையை அவதானித்து நாசாவுக்கு அறிவித்தவர். இம்முறை பூமியைப் போன்ற அளவுள்ள தீப்பந்து மோதுகையின் பின்னர் எழும்பியதை அவதானித்துள்ளார். விண்கல் ஒன்று கோள் ஒன்றில் மோதியதை காணொளி மூலம் பதிவு செய்யப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.


சென்ற ஆண்டு வியாழன் மோதுகையைப் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டு சில மணி நேரத்தில் புதிய மோதுகை அவதானிக்கப்பட்டுள்ளது. சென்ர ஆண்டு 500 மீட்டர் அகலமுள்ள சிறு கோள் ஒன்று 2009, ஜூலை 19 இல் மோதியதென்றும், இதன் மூலம் பசிபிக் பெருங்கடல் போன்ற அளவுள்ள காயம் வியாழனில் தோன்றியுள்ளதாகவும் ஹைடி ஹம்மெல் என்பவரின் தலைமையில் வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். இதன் தாக்கம் பல ஆயிரம் அணுகுண்டுகளின் தாக்கத்துக்கு ஒப்பானதாகும்.


1994 ஜூலையில் ஷூமேக்கர்-லீவு 9 என்ற வால்வெள்ளி வியாழனைத் தாக்கியிருந்தது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]