சிங்கப்பூரின் புதிய அதிபராக டோனி டான் தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 28, 2011

சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் டோனி டான் 7269 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் உள்ள 20.1 லட்சம் வாக்காளர்களில் 35 சவீதம் பேர் டோனி டானுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். புதிய அதிபர் வரும் 1-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். சிங்கப்பூர் அதிபர் எஸ். ஆர். நாதனின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து அங்கு அதிபர் தேர்தல் நடந்தது.


சிங்கப்பூரின் புதிய அதிபர் டோனி டான்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவர் டோனி டான். மேலும் மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலைப் படிப்பும், ஆத்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். சிங்கப்பூர் முதலீட்டுக் கழக நிறுவனத்தில் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.


71 வயதாகும் டோனி டான், முன்பு அமைச்சராக இருந்தவர். வங்கிப் பணியிலிருந்த அனுபவம் வாயந்தவர். 1979ம் ஆண்டு மக்கள் கட்சியில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். 1995 முதல 2003 வரை துணைப் பிரதமராக இருந்துள்ளார். அதிபர் தேர்தலில் நிற்பதற்காக கடந்த சூன் மாதம் இவர் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்.


சிங்கப்பூர் அதிபர் பதவி கட்சி சார்பற்றது என்றாலும் கூட, அந்தப் பதவிக்கு வருபவர்கள், சிங்கப்பூரின் பழமையான கட்சியான மக்கள் நடவடிக்கைக் கட்சியின் ஆதரவுடன்தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளனர் அல்லது அந்தக் கட்சியுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். இந்தக் கட்சிதான் கடந்த 1959ம் ஆண்டு முதல் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. சிங்கப்பூரில் அதிபரை முன்பு நாடாளுமன்றம்தான் தேர்வு செய்து வந்தது. 1993 முதல் மக்கள் வாக்களித்து தேர்வு செய்து வருகின்றனர்.


மூலம்[தொகு]