பிரபாகரன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் இந்தியா திரும்பப் பெற்றது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 26, 2010

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மற்றும் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2009 இறுதிக்கட்ட ஈழப்போரில் இவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இவ்வழக்குத் தொடர்பாக சிபிஐ விடுத்த வேண்டுகோளை ஏற்று தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோருக்கு எதிரான வழக்கு திரும்பப் பெறப்பட்டதாக தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.


1991 மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜிவ்காந்தி மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயரும், இரண்டாவது குற்றவாளியாக சண்முகநாதன் சிவசங்கரன் என்ற பொட்டு அம்மான் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.


இவர்கள் இருவரும் உயிருடன் இல்லை என இலங்கை அரசு சமர்ப்பித்த ஆவணங்களை இந்திய அரசு இப்போது ஏற்றுக்கொண்டுள்ளதாக இம்முடிவு தெரிவிப்பதாக அவதானிகள் கருதுகின்றனர். இந்திய சட்டத்தின்படி குற்றவாளிகளின் இறப்புகளுக்கு பின்னர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் போகும் ஏற்பாடு உள்ளது.


மூலம்[தொகு]