உள்ளடக்கத்துக்குச் செல்

சோமாலியா தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 5, 2011

சோமாலியத் தலைநகர் மொகதிசு நகரில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 139 பேர் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்தனர்.


வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று அரச அமைச்சு அலுவலக வாயிலில் நுழைய முற்பட்ட போது வெடிக்க வைக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அல்-சபாப் என்ற இசுலாமியப் போராளிக் குழு தாமே இத்தாக்குதலை நடத்தியதாக பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது.


கடந்த ஆகத்து மாதத்தில் மொகதிசுவில் இருந்து தமது போராளிகளை வெளியேற்றிய பின்னர் அல்-சபாப் இயக்கம் நடத்திய பெரும் தாக்குதல் என இது கருதப்படுகிறது.


குறைந்தது 93 பேர் காயமடைந்துள்ளதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தினர் எனவும் கல்வி அமைச்சு அலுவலகத்துக்கு வந்திருந்த மாணவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகளின் ஆதரவில் இயங்கும் இடைக்கால அரசு இத்தாக்குதலைக் கண்டித்துள்ளது. அரசு உயர் அதிகாரிகள் எவரும் இத்தாக்குதலில் காயமடையவோ இறக்கவோ இல்லை என அரசு தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு இடம்பெற்ற நேரம் அலுவலகத்தில் அரச அதிகாரிகளின் கூட்டம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


1991 ஆம் ஆண்டில் முகமது சியாட் பாரே பதவியில் இருந்து அகற்றப்பட்டதில் இருந்து அங்கு நிருவாக அரசு ஒன்று அமைக்கப்படவில்லை.


மூலம்

[தொகு]